ஜி-20, ஆசியான் உள்ளிட்ட உச்சி மாநாடுகளில் பங்கேற்கும் வகையில் ஆஸ்திரேலியா, மியான்மர், ஃபிஜி ஆகிய மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை புறப்படுகிறார். முதல் கட்டமாக, மியான்மர் செல்லும் மோடி, அங்கு 12-ஆம் தேதி நடைபெறும் ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். பின்னர், 13-ஆம் தேதி நடைபெறவுள்ள கிழக்காசிய மாநாட்டிலும் அவர் கலந்து கொள்கிறார்.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம்: ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் 15-ஆம் தேதி தொடங்கி, இரண்டு நாள்கள் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர், உலகப் பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட முக்கய விவகாரங்கள் குறித்து பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அடுத்த 5 ஆண்டுகளில், தங்கள் நாடுகளில் 5 சதவீதப் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த ஜி-20 நாடுகள் உத்தேசித்துள்ளன. இந்த நாடுகள் பங்கேற்கும் உச்சி மாநாட்டில் இதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து விவாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, 16-இல் தொடங்கி 18-ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவின் சிட்னி, கான்பெரா, மெல்போர்ன் ஆகிய நகரங்களில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 28 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியா செல்லும் முதல் இந்தியப் பிரதமர் என்ற முறையில் மோடியின் இந்த சுற்றுப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது அந்நாட்டின் பிரதமர் டோனி அபோட்டுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். அப்போது இரு நாட்டு உறவுகள், உலக அளவில் பெருகிவரும் வேலையில்லாத் திண்டாட்டம் ஆகிய விவகாரங்கள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் ஆலோசனை நடத்தவுள்ளதாகத் தெரிகிறது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் ஒரு கட்டமாக, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தவுள்ளார். பின்னர், மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியையும் அவர் தொடங்கி வைக்கிறார். இதையடுத்து, சிட்னியில் உள்ள ஒலிம்பிக் பூங்காவில் இந்திய சமூகத்தினரிடையே மோடி உரையாற்றுகிறார்.
ஃபிஜி பயணம்: தனது 10 நாள் சுற்றுப்பயணத்தின் இறுதிக்கட்டமாக, ஃபிஜி நாட்டுக்கு 19-ஆம் தேதி மோடி பயணம் மேற்கொள்கிறார். 1981-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஃபிஜி நாட்டுக்குச் செல்லும் இந்தியப் பிரதமர் மோடி ஆவார். கருப்புப் பண விவகாரத்துக்கு முக்கியத்துவம்: ஜி-20 மாநாட்டில் கருப்புப் பண விவகாரத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்தார்.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கருப்புப் பணத்தை மீட்டெடுக்கும் விவகாரத்தின் முக்கியத்துவம் குறித்து ஜி-20 மாநாட்டில் எடுத்துரைப்பேன். எனது இந்தச் சுற்றுப்பயணத்தில் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா உள்ளிட்ட பிராந்தியத் தலைவர்களைச் சந்தித்து பேசவுள்ளேன் என மோடி தெரிவித்துள்ளார்.