பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாள் பயணமாக ஆஸ்திரேலியா வந்து சேர்ந்தார். சனிக்கிழமை தொடங்கவுள்ள ஜி-20 நாடுகளின் உச்சி மாநாட்டில் கருப்புப் பணம், வரி ஏய்ப்பு ஆகியவற்றை எதிர்க்க உலகளாவிய ஒத்துழைப்பை அதிகரிக்குமாறு அவர் வலியுறுத்த உள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1986ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன் பின், பிரதமர் மோடி தற்போது அந்நாட்டுக்கு 5 நாள் பயணமாக வந்துள்ளார். முன்னதாக மியான்மர் தலைநகர் நேப்பிடாவில் ஆசியான் மற்றும் கிழக்காசிய அமைப்பு ஆகியவற்றின் உச்சி மாநாடுகளில் அவர் கலந்து கொண்டார். அதன் பின், அவர் ஏர் இந்திய சிறப்பு விமானம் மூலம் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகருக்கு வெள்ளிக்கிழமை காலை வந்து சேர்ந்தார். அவரை குயின்ஸ்லாந்து மாகாணப் பிரதமர் கேம்பெல் நியூமேன் உள்ளிட்டோர் வரவேற்றனர். அப்போது ஆஸ்திரேலியாவுக்கான இந்தியத் தூதர் பீரேன் நந்தா உள்ளிட்டோர் உடனிருந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் மோடி கூறியதாவது: கருப்புப் பணத்துக்கு எதிராக சர்வதேச ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதே எனக்கு முக்கிய விஷயமாகும். அடுத்த தலைமுறை உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க ஜி-20 உச்சி மாநாடு எவ்வாறு ஊக்கமளிக்க முடியும் என்பது குறித்தும் தூய்மையான எரிசக்தியை உறுதிப்படுத்துவது குறித்தும் விவாதிக்க நான் விரும்புகிறேன் என்றார் மோடி. ஜி-20 அமைப்பில் ஆர்ஜென்டீனா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஃபிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்சிகோ, ரஷியா, சவூதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய 19 தனி நாடுகளும் ஐரோப்பிய யூனியனும் இடம்பெற்றுள்ளன.
உலகின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85 சதவீதம் ஜி-20 நாடுகளில் நடைபெறுகிறது. உலக வர்த்தகத்தில் இந்த நாடுகளின் பங்கு, 80 சதவீதமாகும். உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கினர் ஜி-20 நாடுகளில் வசிக்கின்றனர். இந்நிலையில், இந்த அமைப்பின் உச்சி மாநாடு, பிரிஸ்பேனில் சனிக்கிழமை தொடங்க உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தாத பொருளாதார வளர்ச்சி குறித்த இந்தியாவின் கவலைகளை பிரதமர் பகிர்ந்து கொள்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தவிர, ஆஸ்திரேலியாவின் முன்னணி தொழிலதிபர்களையும் அவர் சந்தித்து உரையாட உள்ளார். பின்னர் அந்நாட்டின் தலைநகர் கான்பெர்ரா நகருக்குச் செல்ல உள்ள அவர், அங்கு ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபோட்டுடன் இருதரப்புச் சந்திப்பை நடத்த உள்ளார். இந்திய வரைபடத்தில் மாயமான காஷ்மீர்: இதனிடையே, பிரிஸ்பேனில் உள்ள குயின்ஸ்லாந்து தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துக்கு மோடி சென்றபோது அங்கு வைக்கப்பட்டிருந்த இந்திய வரைபடத்தில் காஷ்மீர் இடம்பெற்றிருக்கவில்லை. இதற்கு இந்திய வெளியுறவுச் செயலாளர் சுஜாதா சிங் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். இந்தத் தவறுக்காக மோடி சந்திப்பு நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள், அவரிடம் மன்னிப்புக் கோரியதாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதீன் தெரிவித்தார்.
மோடிக்கு விருந்தளித்த ஜப்பான் பிரதமர்: பிரிஸ்பேனில் ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், ஐரோப்பிய யூனியன் தலைவர் ஹெர்மன் வான் ராம்பய் ஆகியோருடன் மோடி இரு தரப்புச் சந்திப்புகளை நடத்தினார். கேமரூனை மோடி சந்தித்தது இதுவே முதல் முறையாகும். உணவுப் பாதுகாப்பு விவகாரத்தில் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே ஏற்பட்ட முட்டுக்கட்டை நிலை நீங்கியதற்கு மேற்கண்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். மோடிக்கு ஜப்பான் பிரதமர் அபே விருந்தளித்து கௌரவித்தார். இந்த இரு தலைவர்களும் கடந்த 3 மாதங்களில் சந்திப்பது இது இரண்டாவது முறையாகும். நேருவுக்குப் புகழஞ்சலி: இதனிடையே, நாட்டின் முதல் பிரதமர் நேருவின் 125ஆவது பிறந்த தினத்தையொட்டி, அவருக்கு மோடி புகழஞ்சலி செலுத்தினார். பிரிஸ்பேன் நகரில் இருந்தபடி மோடி, டுவிட்டர் இணையதளத்தில் வெளியிட்ட பதிவில், ""நேருவின் 125ஆவது பிறந்த தினத்தை இன்று கொண்டாடுகிறோம். இத்தருணத்தில், சுதந்திரப் போராட்ட காலத்தில் அவரது முயற்சிகளையும், நாட்டின் முதல் பிரதமராக அவர் ஆற்றிய பணியையும் நினைவுகூர்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.