விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது ஐரோப்பிய யூனியன் விதித்த தடை வியாழக்கிழமை ரத்து செய்யப்பட்டது. தடையை ரத்து செய்து, லக்ஸம்பர்க்கில் உள்ள ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் தீர்ப்பளித்தது."பத்திரிகை செய்திகளையும், இணையதளத்தில் வெளிவந்த செய்திகளையும் அடிப்படையாக வைத்து இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் தொடர்பாக இந்திய அதிகாரிகள் தரப்பில் தரப்பட்ட தகவல்களை நம்பகமானவையாக எடுத்துக் கொள்ள முடியாது. ஏனெனில், இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற போரில் ஒருதலைபட்சமான அணுகுமுறையை அவர்கள் கொண்டிருந்தனர்' என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
எனினும், "விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது தேவைப்பட்டால் இரண்டு மாதங்களுக்குள் ஐரோப்பிய யூனியன் புதிய கட்டுப்பாடுகளை விதிக்கலாம்.தற்போதைக்கு பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து விடுதலைப்புலிகள் இயக்கம் நீக்கப்படாது. அந்த இயக்கத்துக்குச் சொந்தமான சொத்துகள் முடக்கப்பட்டிருக்கும்' என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. கடந்த 2006ஆம் ஆண்டு, பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஐரோப்பிய யூனியன் சேர்த்தது.