தீபாவளி பண்டிகையையொட்டி முதுமலை புலிகள் காப்பகத்தை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டுமென வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இம்மாதம் 22ம்தேதி நடைபெறவுள்ள தீபாவளி பண்டிகை விடுமுறையை முன்னிட்டு தமிழகம் மற்றும் இதர மாநிலங்களிலிருந்து முதுமலை புலிகள் காப்பகத்தை பார்வையிடும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகளவில் இருக்குமென எதிர்பார்ப்பதால் வனம் மற்றும் வன உயிரினங்களின் பாதுகாப்பு கருதி பொதுமக்கள் வனத்துறையினரின் அறிவுரைகளை கடைபிடிக்க வேண்டும்.
அதன்படி வனப்பகுதியை சுற்றியுள்ள ஓய்வு விடுதிகள், சாலையோரங்கள் மற்றும் வனங்களையொட்டியுள்ள பகுதிகளில் பொதுமக்கள் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். சுற்றுலாப்பயணிகள் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் வனப்பகுதிகளில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை பயன்படுத்தக் கூடாது. மேலும், சுற்றுலாப் பயணிகள் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தி வன உயிரினங்களை பார்வையிடும் செயலினையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் வனம் மற்றும் வன உயிரினங்களை பாதுகாக்கவும், சமூக விரோத செயல்கள் நடைபெறாமலிருக்கவும் இத்தகைய கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடித்து பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.