ஹாங்காங்கில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜனநாயகவாதிகளை சீனா கையாளும் விதம் குறித்து அமெரிக்காவும், பிரிட்டனும் விமர்சித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சீனா, ஹாங்காங் விவகாரத்தில் தலையிட எந்த நாட்டுக்கும் உரிமையில்லை எனத் திட்டவட்டமாகக் கூறியுள்ளது. அமெரிக்கா, பிரிட்டனின் விமர்சனங்கள் குறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹாங் லேயிடம் செய்தியாளர்கள் வியாழக்கிழமை கேட்டனர்.
அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
ஹாங்காங் விவகாரத்தில் தலையிட எந்த அன்னிய நாட்டுக்கும் உரிமை கிடையாது. போராட்டக்காரர்களை கலைப்பதற்கான நடவடிக்கைகளின்போது நிகழ்ந்ததாகக் கூறப்படும் சம்பவங்கள் குறித்து, ஹாங்காங் நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ஹாங்காங்கில் போராட்டக்காரர்கள் நடந்துகொண்ட விதம் முற்றிலும் சட்டத்துக்குப் புறம்பானது. அவர்களது நடவடிக்கைகளை உலகின் எந்த சமுதாயத்தினராலும் சகித்துக் கொள்ள முடியாது."ஆக்குபை சென்ட்ரல்' இயக்கத்தினர் ஹாங்காங்கின் முக்கிய சாலைகளை ஆக்கிரமித்து போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்தனர்.போலீஸார் தங்கள் கடமையைச் செய்ய விடாமல் தடுத்தனர். சட்ட, ஒழுங்கு சீர்கேட்டை ஏற்படுத்தினர் என்றார் அவர்.
சீனா திணறல்?: இதற்கிடையே, ஜனநாயக ஆதரவு போராட்டத்துக்கு எதிராக சீனா உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளதைப் போல் தோன்றினாலும், மூன்றாவது வாரத்தை நெருங்கும் இந்தப் போராட்டத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை முடிவு செய்வதில் சீனா திணறி வருவதாக பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.அமெரிக்கா கவலை: முன்னதாக, ஹாங்காங்கில் கைகள் கட்டப்பட்டிருந்த நிலையில் ஒரு போராட்டக்காரரை போலீஸார் அடித்து உதைத்ததாக வெளியான செய்தி குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்தது. இந்த விவகாரம் குறித்து விரைவான, நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அந்நாடு வலியுறுத்தியது. பிரிட்டன் விமர்சனம்: ஹாங்காங் போராட்டங்கள் குறித்து பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பிரதமர் டேவிட் கேமரூன் புதன்கிழமை பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
பிரிட்டன் ஹாங்காங்கை 1997-ஆம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைத்தபோது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தைப் பின்பற்றி சீனா நடந்துகொள்ள வேண்டும்.பிரிட்டனின் ஆளுகைக்குள் ஹாங்காங் மக்கள் அனுபவித்த பேச்சு, எழுத்து சுதந்திரத்தையும், கூட்டங்கள், இயக்கங்கள், போராட்டங்கள் நடத்துவதற்கான உரிமைகளையும் சீனா தொடர்ந்து வழங்கவேண்டும்.இந்த உரிமைகள் குறித்து "பிரிட்டன்-சீன' ஒப்பந்தத்தில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது என்று கேமரூன் குறிப்பிட்டார்.