இராக்கிலும், சிரியாவிலும் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளின் தாக்கம் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தேசிய பாதுகாப்பு அதிகாரிகளுடன் அதிபர் ஒபாமா நடத்திய சந்திப்பின்போது, இராக்கிலும், சிரியாவிலும் தற்போது நிலவும் அரசியல் சூழல்கள் குறித்து கேட்டறிந்தார்.
இராக்கிய வீர்ரகளுக்கு போர்ப் பயிற்சி, ஆலோசனை, ஆயுதங்கள் ஆகியவற்றை வழங்கும் திட்டத்தால் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் அவர் விவாதித்தார். மேலும், அந்த நாடுகளில் ஐ.எஸ்.ஸூக்கு எதிரான நடவடிக்கைகளின் தாக்கம் குறித்தும் அவர் ஆலோசித்தார்.துணை அதிபர் ஜோ பைடன், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூஸன் ரைஸ் ஆகியோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.