வேள் என்னும் சொல்லின் அடியாகப் பிறந்த வேளாண்மை என்னும் சொல் பொதுவாக கொடை, ஈகை ஆகியற்றைக் குறிக்கும்.நிலமானது தரும் கொடையாதாலால் இப்பெயர் வழங்கியிருக்கலாம். வேளான் என்னும் சொல் வெள்ளத்தை (நீரை) ஆள்பவன் என்னும் பொருளது என்பர்.வேளாண்மை என்ற சொல் “விருப்பத்துடன் பிறரைப் பேணுதல்” என்ற பொருளும் கொண்டதாகும். வேளாண்மையைக் குறிக்கின்ற agriculture என்னும் ஆங்கிலச் சொல் agricultūra என்னும் இலத்தீன் சொல்லிலிருந்து பிறக்கிறது. ager என்பது “நிலம்” என்றும், “cultura” என்பது “பண்படுத்தல்” என்றும் பொருள்தரும். எனவே, “நிலத்தைப் பண்படுத்தும்” செயல்பாடு “agricultūra” (“agriculture”) என்று அழைக்கப்படலாயிற்று. மேலும், “cultura” என்னும் சொல்லே “பண்பாடு” என்னும் செம்மைப் பொருளை ஏற்றது. அதைத் தொடர்ந்து, “cult” என்னும் சொல் “வழிபாடு” என்னும் பொருளிலும், உள்ளத்தைப் பண்படுத்தல் “கல்வி” என்னும் பொருளிலும் வழங்கலாயிற்று.
தமிழில் “கல்வி” என்பது “அகழ்தல்” என்னும் பொருள் தருவதையும் இவண் கருதலாம்.இவ்வாறு, நிலத்தோடு தொடர்புடைய வேளாண்மைத் தொழில் மனித இனத்தின் உயர்நிலைச் செயல்பாடுகளை உணர்த்துகின்ற காரணி ஆயிற்று.