தீபாவளி நெருங்கி வரும் நிலையில், ஈரோடு ஜவுளிச் சந்தையில் தினமும் ரூ.5 கோடிக்கு வர்த்தம் நடைபெறுகிறது.நூறு ஆண்டுகள் பழமையான ஈரோடு ஜவுளிச்சந்தை கனி மார்க்கெட், அசோகபுரம், திருவேங்கடசாமி வீதி உள்ளிட்ட இடங்களில் இயங்கி வருகின்றன. கனி மார்க்கெட்டில் தினமும் ஜவுளிச்சந்தை நடக்கிறது. பிற இடங்களில் செவ்வாய்க்கிழமைதோறும் ஜவுளிச்சந்தை நடைபெறும். கனிமார்க்கெட்டில் தினமும் 330 கடைகள் இயங்கி வருகின்றன. இது தவிர ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை மாலை தொடங்கி செவ்வாய், புதன்கிழமை வரை நடக்கும் வாரச் சந்தையில் 730 கடைகள் இடம்பெறும். இந்த மூன்று நாள்களிலும் 1,060 கடைகள் இயங்குவதால், விற்பனை அதிகளவில் இருக்கும். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினருக்கும் தேவையான ஜவுளி ரகங்கள் அடுத்தடுத்த கடைகளில் கிடைப்பதாலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தீபாவளி ஜவுளி கொள்முதலுக்காக பொதுமக்கள் வந்துசெல்கின்றனர். இதனால், ஜவுளி விற்பனை அதிகரித்துள்ளது. வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து கனி மார்க்கெட் வாரச்சந்தை வியாபாரிகள் சங்கத் தலைவர் செல்வராஜ் கூறியது:வழக்கமாக சந்தை நாள்களில் நாள் ஒன்றுக்கு ரூ.2 கோடிக்கு விற்பனை நடக்கும். கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தீபாவளி ஜவுளி கொள்முதலுக்காக பொதுமக்கள் அதிகம் வருகின்றனர். இதனால், தினமும் ரூ.5 கோடிக்கு விற்பனை நடந்து வருகிறது. இந்த ஆண்டு ஜவுளிகளின் விலையில் பெரிய மாற்றம் இல்லாததும், மழை இல்லாததும் விற்பனை அதிகரிக்கக் காரணமாக உள்ளது. தீபாவளிக்குள் ரூ.60 கோடிக்கு விற்பனை நடக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.