2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்குடன் தொடர்புடைய சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை வழக்கில், மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி உள்பட 10 பேர் மற்றும் 9 நிறுவனங்கள் மீது மத்திய அமலாக்கத் துறை சுமத்திய குற்றச்சாட்டுகளை தில்லி சிபிஐ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை பதிவு செய்தது. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 11-ஆம் தேதி தொடங்கப்படும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு தொடர்பாக மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, ஸ்வான் டெலிகாம் மேம்பாட்டாளர் ஷாஹித் உஸ்மான் பால்வா, வினோத்குமார் கோயங்கா, ஆசிஃப் பால்வா, ராஜீவ் அகர்வால், கரீம் மொரானி, சரத்குமார், தயாளு அம்மாள், கனிமொழி, பி. அமிர்தம் மற்றும் ஸ்வான் டெலிகாம் (தற்போது எடிசலாட் டிபி டெலிகாம்), குசேகன் ரியாலிட்டி, சினியூக் மீடியா என்டர்டெயின்ட்மென்ட், கலைஞர் டிவி, டைனமிக்ஸ் ரியாலிட்டி, எவர்ஸ்மைல் கன்ஸ்டிரக்ஷன்ஸ், கொன்வுட் கன்ஸ்டிரக்ஷன்ஸ் அன்ட் டெவலப்பர்ஸ், டிபி ரியாலிட்டி, நிஹார் கன்ஸ்டிரக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக கடந்த ஏப்ரலில் மத்திய அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. அதில், சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மீது குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பிலும் அமலாக்கத் துறை தரப்பிலும் முன்வைக்கப்பட்ட வாதங்கள் அண்மையில் நிறைவடைந்தன.
நீதிபதி உத்தரவு: இதையடுத்து, இந்த வழக்கு தில்லி சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறப்பு நீதிபதி சைனி பிறப்பித்த உத்தரவின் விவரம்: குற்றம்சாட்டப்பட்டோர் மீது அமலாக்கத் துறை சுமத்திய குற்றச்சாட்டுகள், கலைஞர் டிவிக்கும் பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கும் இடையே நடைபெற்ற நிதிப் பரிவர்த்தனைகள் சட்டவிரோதமாக நடந்தவை என்பதை நிரூபிக்க போதுமான முகாந்திரம் இருப்பதாக நீதிமன்றம் கருதுகிறது. எனவே, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை சட்டப் பிரிவு 3,4 ஆகியவற்றின் கீழ் அமலாக்கத் துறை சுமத்திய குற்றச்சாட்டுகள் அடிப்படையில் இந்த வழக்கு விசாரணை, வாதங்கள் நவம்பர் 11 முதல் தொடங்கப்படும்' என்று உத்தரவில் சிறப்பு நீதிபதி குறிப்பிட்டார்.
முன்னதாக, இந்த வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமை காலையில் தொடங்கியதும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அவர்கள் சார்பில் வழக்குரைஞர்களும் வந்திருந்தனர். தயாளு அம்மாளுக்கு உடல்நிலை சரியில்லாததால், அவர் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு ஆஜராகாமல் இருக்க ஏற்கெனவே அவருக்கு ஜாமீன் வழங்கியபோதே சிறப்பு நீதிபதி சைனி விலக்கு அளித்திருந்தார். இதையடுத்து, தயாளு அம்மாள் சார்பில் வழக்குரைஞர்கள் சண்முகசுந்தரம், சுதர்சன் ராஜன் ஆஜராகினர். அவர்களிடம் "இந்த வழக்கில் நீங்கள் (குற்றம்சாட்டப்பட்டவர்கள்) குற்றம் செய்ததாகக் கருதுகிறீர்களா?' என்று சிறப்பு நீதிபதி சைனி கேட்டதும், "இல்லை' என்று வழக்குரைஞர்கள் பதில் அளித்தனர். இதைத் தொடர்ந்து, மேற்கண்ட உத்தரவை சிறப்பு நீதிபதி சைனி பிறப்பித்தார். வழக்கின் விவரம்: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்றதற்கு பிரதிபலனாக ஸ்வான் டெலிகாம் நிறுவனம், டி.பி. ரியாலிட்டி, குசேகான் ரியாலிட்டி, சினியுக் மீடியா என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் மூலம் திமுக ஆதரவு கலைஞர் டிவிக்கு அளிக்கப்பட்ட ரூ.200 கோடி அளவிலான நிதியை சட்டவிரோத பணப் பரிவர்த்தனை என்று குற்றம்சாட்டி, மத்திய அமலாக்கத் துறை கடந்த ஏப்ரல் மாதம் தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் ஜாமீனில் செல்ல கடந்த மே மாதம் சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார்.
இதற்கிடையே, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் சிபிஐ தனியாக தொடர்ந்த ஊழல் வழக்கில் நீதிமன்றம் பதிவு செய்த குற்றச்சாட்டுகள் அடிப்படையில், குற்றம்சாட்டப்பட்டோர், சிபிஐ தரப்பு வாதங்கள் அண்மையில் நிறைவடைந்தன. இதையடுத்து, இந்த வழக்கின் இறுதி வாதங்களை வரும் நவம்பர் 10-ஆம் தேதிக்கு சிபிஐ நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. அதற்கு மறுநாளான நவம்பர் 11-இல் அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கின் விசாரணை முறைப்படி சிபிஐ நீதிமன்றத்தில் தொடங்கவுள்ளது.