BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Tuesday 12 August 2014

மதுக்கடைகளை மூட அரசு முன்வர வேண்டும்: வைகோ கோரிக்கை

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

தமிழ்நாடு சட்டமன்றத்தில் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை அமைச்சர், ஆகஸ்டு 11 ஆம் தேதி ஒரு சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்திருக்கிறார். தமிழ்நாடு அபாயகரமான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் சில திருத்தங்கள் செய்வதற்கு இம்மசோதா வகை செய்கிறது. ‘குண்டர் சட்டம்’ என்று அழைக்கப்படும் இச்சட்டத்தின் கீழ் கள்ளச்சாராயக்காரர்கள், மருந்து சரக்குக் குற்றவாளிகள், வனக்குற்றவாளிகள், குண்டர்கள், விபச்சாரத் தொழில் குற்றவாளிகள், மணல் கடத்தும் குற்றவாளிகள், குடிசை நில அபகரிப்பாளர்கள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது இவற்றோடு தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துவோர், பாலியல் குற்றவாளிகள் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரையில் குண்டர் சட்டம் என்பது, தொடர் குற்றங்களில் ஈடுபடும் வழக்கமான குற்றவாளிகள் மீது மட்டும்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது கொண்டுவரப்பட்டுள்ள திருத்தத்தின் மூலம், முதல் முறையாக குற்றச்செயலில் ஈடுபடுவோருக்குக்கூட ஒரு ஆண்டு காலம் விசாரணை இன்றியே சிறையில் அடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தகவல் தொழில் நுட்பத் துறையில் வியத்தகு வளர்ச்சி பெற்று கோடிக் கணக்கானோர் சமூக வலைத் தளங்களில் கருத்துக்களை பகிர்ந்து கொள்கின்றனர். அரசின் மீது கருத்து மாறுபாடு கொண்டோர், அரசு நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்தோர் கருத்துக்களை பகிர்ந்தால், தற்போது கொண்டுவந்துள்ள சட்டத்திருத்த மசோதாவின் படி நடவடிக்கை எடுத்து சிறையில் தள்ள முடியும். தகவல் தொழில்நுட்பக் குற்றங்களை தடுப்பதற்காக கொண்டுவரப்படுவதாக அமைச்சர் தெரிவித்து இருந்தாலும், இச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதற்குத்தான் வாய்ப்புகள் அதிகம். இச்சட்டத் திருத்தங்கள் அரசியல் சட்டப்பிரிவு 22க்கு எதிரானது என்று ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு சுட்டிக்காட்டியிருக்கிறார். மேலும் அரசியல் சாசனம் பிரிவு 21இன் கீழ் வழங்கப்பட்டுள்ள தனி மனித சுதந்திர உரிமையையும் தட்டிப் பறிப்பதாக சட்டத்திருத்தம் அமைந்துள்ளது.

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்குவோர் மீது மட்டுமே பயன்படுத்தப்படும் என்று கொண்டுவரப்பட்ட தடா, பொடா போன்ற கொடூர சட்டங்கள், தவறாக பயன்படுத்தப்பட்டதற்கு ஏராளமான முன்னுதாரணங்கள் இருக்கின்றன. அதைப் போலவே குண்டர் சட்டத் திருத்த மசோதா நிறைவேறினால் பெரும்பாலும் அரசின் பழிவாங்குதலுக்கும், அச்சுறுத்தலுக்கும், பொய் வழக்குகள் புனைவதற்கும் வழிவகுக்கும். கொடிய பாலியல் குற்றங்களை தடுப்பது மட்டுமல்ல அச்செயலில் ஈடுபடுவோர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித கருத்து மாறுபாடும் கிடையாது.

ஆனால், அதே நேரத்தில் நோய் தீர வேண்டுமானால் அதற்காக மூலக் காரணம் என்ன என்பதை ஆராய்ந்து அறிய வேண்டும். பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கும், குற்றச் செயல்களுக்கும் அடிப்படை காரணமாக இருப்பது மதுப்பழக்கம் தான்; குடிவெறியர்களின் கூடா செயல்களுக்கு திரும்புகின்ற திசையெல்லாம் மதுக்கடைகளை அரசே திறந்து வைத்து நடத்துவதுதான் மூலக் காரணம் ஆகும்.

தமிழக அரசு நடத்துகின்ற மதுக்கடைகளை மூட முடியாது என்று சட்டமன்றத்தில் அறிவித்துவிட்டு, பாலியல் குற்றங்களைத் தடுக்கிறோம் என்று சட்டங்களை கொண்டு வருவதால் மட்டும் சமுதாயத்தை திருத்த முடியாது. தமிழகத்தின் பண்பாட்டு சீரழிவுக்கும், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கும் முதன்மை காரணமாக இருக்கின்ற மதுப்பழக்கத்தை அடியோடு ஒழித்துகட்ட மதுக்கடைகளை நிரந்தரமாக இழுத்து மூடுவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும்; ஜனநாயகத்தின் பெயரால் அச்சுறுத்தலுக்கும், பழிவாங்குதலுக்கும், கருத்துரிமை பறிப்பதற்கும், வகை செய்கின்ற சட்டத் திருத்தங்கள் கொண்டு வருவதை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies