Doctor Vikatan: ஸ்ட்ரெஸ்ஸை குறைக்க உதவுவதாகச் சொல்லி சிலர் மஞ்சள் நிற Stress Ball- ஐ கையில் வைத்து அழுத்துவதைப் பார்த்திருக்கிறேன். இன்னும் சிலர், அந்தப் பந்து கைகளுக்கான பயிற்சிக்கானது என்றும் சொல்கிறார்கள். உண்மையில் Stress Ball-ன் உபயோகம் என்ன... அதை யார் வேண்டுமானாலும் உபயோகிக்கலாமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்

உள்ளங்கையில் வைத்து உபயோகிப்பதால், ஸ்ட்ரெஸ் பால் (Stress Ball) என்பது கைகளில் குறிப்பிட்ட தசைகளை மட்டுமே பலப்படுத்தும். இது மருத்துவரீதியாகப் பரிந்துரைக்கப்படுவதில்லை.
பெரும்பாலும் மன அழுத்தத்தை விரட்டவே ஸ்ட்ரெஸ் பால் (Stress Ball) உபயோகிக்கப் பரிந்துரைக்கப்படும். அந்தப் பந்தை உள்ளங்கையில் வைத்து அழுத்துவதன் மூலம், உங்கள் உணர்வுகள் கட்டுப்படுத்தப்படும். உதாரணத்துக்கு, உங்கள் கோபம் தணியும், ஸ்ட்ரெஸ் குறையும்.
கைகளில் ஏதோ அடிபட்டுவிட்டது, அதற்கான சிகிச்சையில் இருந்து மீண்டிருக்கிறீர்கள் என்ற நிலையில், உங்கள் கைகளின் தசைகளை பலப்படுத்தவும் ஸ்ட்ரெஸ் பால் உபயோகிக்கும்படி அறிவுறுத்தப்படும். தினமும் குறிப்பிட்ட நேரம் அந்தப் பந்தை அழுத்திப் பயிற்சி செய்வதன் மூலம் தசைகள் மற்றும் மூட்டுகள் பலப்படும்.

இவற்றைத் தாண்டி, சிலருக்கு ஸ்ட்ரெஸ் பாலை அழுத்திப் பயிற்சி செய்வதன் மூலம் நல்ல உறக்கம் வருவதுண்டு. இதன் பின்னணியில் இருப்பதும் ஸ்ட்ரெஸ்தான். அதாவது நீங்கள் ஸ்ட்ரெஸ்ஸிலோ, அதீத உணர்ச்சிவசப்பட்ட நிலையிலோ இருக்கும்போது, அதிலிருந்து கவனத்தை வேறு விஷயத்தில் திருப்பும்போது மனம் அமைதியாகும். அதனால் நல்ல உறக்கம் வரும். ஸ்ட்ரெஸ் பால் உபயோகிப்பதால் பாதக விளைவு ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை. மற்றபடி, மேற்குறிப்பிட்ட தேவை உள்ள யார் வேண்டுமானாலும் ஸ்ட்ரெஸ் பால் பயிற்சியைச் செய்யலாம், தவறே இல்லை.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.