செஸ் விளையாட்டில் இந்த வருடம் இந்தியாவுக்கு சாம்பியன் பட்டம், பதக்கங்கள் கொண்டுவந்தவர்களின் பட்டியலில் குகேஷ், கொனேரு ஹம்பி ஆகியோரோடு தமிழ்நாட்டைச் சேர்ந்த வைஷாலி இணைந்துள்ளார். இந்தியாவின் செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி, நியூயார்க்கில் நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்த உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
இந்தத் தொடரில், 11 சுற்றுகள் முடிவில் 9.5 புள்ளிகள் பெற்று காலிறுதியில், சீனாவைச் சேர்ந்த ஜு ஜினருக்கு எதிராகக் களம் கண்டார் வைஷாலி. அதில், 2.5 - 1.5 புள்ளிகள் பெற்று ஜு ஜினரை வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார். அரையிறுதிச் சுற்றில் சீன வீராங்கனை ஜு வென்ஜுனை எதிர்கொண்ட வைஷாலி, 0.5 - 2.5 புள்ளிகள் எனத் தோல்வியடைந்ததால் இறுதிப்போட்டிக்குச் செல்லும் வாய்ப்பை இழந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
வைஷாலி வெற்றிபெற்றதைத்தொடர்ந்து வாழ்த்தியிருக்கும், ஐந்து முறை உலக செஸ் சாம்பியனும், சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவருமான விஸ்வநாதன் ஆனந்த், ``வெண்கலப் பதக்கம் வென்ற வைஷாலிக்கு என் வாழ்த்துகள். இவரின் இந்த வெற்றி ஒரு பவர் பேக் பெர்பார்மென்ஸ். மேலும் இவரின் வெற்றிக்கு வெஸ்ட் பிரிட்ஜ் ஆனந்த் செஸ் அகாடமி பெருமைப்படுகிறது.
அவரையும், அவரது விளையாட்டையும் ஆதரிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். 2021-ல், நாங்கள் வலிமையான செஸ் வீரர்களைப் பெறுவோம் என்று நினைத்தோம். இப்போது, நாங்கள் ஒரு உலக சாம்பியன் (ஹம்பி) மற்றும் வெண்கலப் பதக்கம் வென்றவரைப் (வைஷாலி) பெற்றிருக்கிறோம்." என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
நியூயார்க்கில் இந்தத் தொடர் கூடவே நடைபெற்ற உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் கொனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் வென்று, இரண்டு முறை உலக ரேபிட் செஸ் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனை என்ற சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...
https://bit.ly/MadrasNallaMadras