சென்னை: பட்டிக்காட்டுப் பொன்னையா படத்துல எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவைப் பார்த்து ஒரு பாட்டுப் பாடுவார். இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பளை என்று. அந்தப் பாட்டு உண்மையாகி விட்டது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். மலேசியாவுக்குப் போய் மகன் பட ஷூட்டிங்கை மேற்பார்வையிட்டு விட்டு வெற்றிகரமாக திரும்பியுள்ள விஜயகாந்த் முதல் நிகழ்ச்சியாக தனது கட்சி எம்.எல்.ஏ. அனகை முருகேசன் வீட்டுத் திருமண விழாவில் கலந்து கொண்டார்.
அங்கு அவர் மணமக்களை வாழ்த்தி விட்டு அரசியல் பக்கம் தாவினார்.. அவரது பேச்சிலிருந்து.... பால் விலை, பஸ் கட்டணம் மக்களை பாதிப்பதால், ஜெயலலிதாவை மக்களை வஞ்சிக்கிற முதல்வர் என்றே அழைக்க வேண்டும் இங்குள்ளவர்கள் ஜெயலலிதாவை மக்கள் முதல்வர் என கூறுகின்றனர். அறையில் பூட்டி கொண்டு இருப்பவர்தான் மக்கள் முதல்வரா. பால், பஸ் கட்டணம், மின்சார கட்டணம் போன்றவற்றை உயர்த்துபவர்தான் மக்களின் முதல்வரா. அவரை குற்றவாளி ஜெயலலிதா என்றுதான் சொல்ல வேண்டும். மக்களை வஞ்சிக்கிற முதல்வர் என்று கூற வேண்டும். அதை சொல்ல தயங்குவது ஏன்? பட்டிக்காட்டு பொன்னையா படத்தில், பெண் இப்படி இருக்க கூடாது என்று ஜெயலலிதாவை பார்த்து எம்ஜிஆர், ஒரு பாடல் பாடுவார். இப்போது அது உண்மையாகி உள்ளது. அந்த படத்தை வாட்ஸ் அப்பில் கட் செய்து சிலர் போடுகிறார்கள். ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அறையில் ஒட்டு கேட்கிறார்கள். டைப்ரைட்டிங் அடிக்க தெரியாத ஒரு பெண்ணை டைப்ரைட்டராக போட்டிருக்கிறார்கள். ஊழலின் உச்சகட்டத்தில் ஆளும்கட்சி உள்ளது. அவர்களை நாட்டை விட்டு ஒழிக்க வேண்டும். காவல்துறை ஏவல் துறையாகிவிட்டது. இனி போலீஸ் வேடத்தில் நடிக்க மாட்டேன். அப்படி நடித்தாலும் போலீசுக்கு எதிராகத்தான் நடிப்பேன் என்றார் விஜயகாந்த்.