தமிழ் வளர்ச்சி-மேம்பாட்டுக்கான திட்ட அறிக்கைளைத் தந்தால், அவற்றைப் பரிசீலிக்க தமிழக அரசு தயாராக இருப்பதாக, தமிழ் வளர்ச்சித் துறை செயலாளர் மூ.ராசாராம் தெரிவித்தார். இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான கலாசாரம், இலக்கியம், கலை தொடர்பான பன்னாட்டுக் கருத்தரங்கம், சென்னை பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில், "ஆஸ்திரேலியாவில் தமிழர்' என்ற நூலை பல்கலைக்கழக துணைவேந்தர் தாண்டவன் வெளியிட, செய்தி-தமிழ் வளர்ச்சித் துறை செயலாளர் மூ.ராசாராம் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில், ராசாராம் பேசியது: தமிழ் மொழியானது 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான மொழியாக இருந்த போதும், இப்போதும் அனைத்துத் தரப்பு மக்களாலும் பேசப்பட்டு வருகிறது. அதன் வடிவமைப்பு, இலக்கணம், பேச்சுவழக்கில் மாறுபாடுகள் ஏற்பட்டாலும், அதன் பழமைத்தன்மை இன்னும் மாறவில்லை.
சங்க இலக்கியங்களில் தமிழ் மொழி குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளதுடன், வர்த்தகம் குறித்த விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த மன்னர்கள் மற்ற நாடுகளுடன் கொண்டிருந்த வர்த்தகத் தொடர்புகளை பட்டினப்பாலை தெளிவாக விளக்குகிறது. சோழ மன்னர்கள் அயல்நாட்டு வர்த்தகத்தை ஊக்குவித்தனர். ஐரோப்பா, மேற்கு ஆசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் அப்போது அயல்நாட்டு வர்த்தகம் செய்யப்பட்டது. கப்பல் கட்டுமானம் என்பது அப்போது முக்கிய தொழிலாக இருந்தது. அயல்நாட்டு வர்த்தகமானது, அவர்கள் அந்த நாடுகளுக்குச் சென்று குடி அமரவும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தது. குறிப்பாக, மியான்மர், மலேசியா, வியாட்நாம், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, மொரீசியஸ் போன்ற நாடுகளுக்கு வணிகம் செய்வதற்காக தமிழர்கள் சென்று, அங்கேயே குடியிருந்தனர். தமிழர்கள் வெளிநாடுகளில் வசித்தாலும் அவர்கள் தங்களது தாய்மொழியை மறக்காமல் இருக்கின்றனர். இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிகாரப்பூர்வ மொழியாக தமிழ் விளங்குகிறது. மலேசியாவிலும் தமிழ் மொழி பேசப்படுகிறது. பிரிட்டன், கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா என தமிழர்கள் இல்லாத நாடுகளே இல்லை.
அந்த நாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு வார இறுதி நாள்களில் தமிழ் மொழி கற்றுக் கொடுக்கப்படுகிறது. அங்குள்ள தமிழ் ஆசிரியர்கள் இதனை ஒரு கௌரவப் பணியாகச் செய்து வருகிறார்கள். தமிழ் மொழி மீது அவர்கள் கொண்டுள்ள அன்பு காரணமாக, மொழிக்கு ஒரு சேவையைச் செய்யும் வகையில் தமிழை கற்றுக் கொடுக்கின்றனர். தமிழகத்தில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கென கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.300 கோடி அளவுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு, மேம்பாட்டுக்கென உள்ள செயல் திட்டங்களை தமிழக அரசுக்கு பரிந்துரை செய்து அனுப்புங்கள். தமிழ் ஆர்வலர்கள் அனுப்பும் இந்த பரிந்துரைகள் ஆய்வு செய்யப்பட்டு அவற்றைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ராசாராம்.