இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்திக்கும், பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலாவுக்கும் புதன்கிழமை (டிச. 10) அந்தப் பரிசு வழங்கப்படவிருக்கிறது. நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெறும் பரிசு வழங்கும் விழாவில் அவர்களிருவருக்கும் நோபல் பதக்கம், நோபல் சான்றிதழ்கள் ஆகியவை வழங்கப்படுகின்றன.
மேலும், நோபல் பரிசுத் தொகைக்கான ஆவணங்களும் அவர்களிடம் அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுத் தொகையான 11 லட்சம் டாலர்களை (சுமார் ரூ.6.8 கோடி) இருவரும் பகிர்ந்துகொள்கின்றனர். இதுகுறித்து கைலாஷ் சத்யார்த்தி கூறுகையில், ""இந்தப் பரிசை இந்தியாவின் குழந்தைகளுக்கும், பொதுமக்களுக்கும் காணிக்கையாக்கவிருக்கிறேன்'' என்றார். நார்வே தலைநகர் ஆஸ்லோவில் தனது குடும்பத்தினருடன் நடந்து செல்கிறார் கைலாஷ் சத்யார்த்தி (இடமிருந்து 3-ஆவது). நாள்: திங்கள்கிழமை.