BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Tuesday, 9 December 2014

மீனவர் பிரச்னையில் மத்திய அரசு நாடகம் : மக்களவையில் அதிமுக குற்றச்சாட்டு

"தமிழக மீனவர்கள் பிரச்னையில் மத்திய அரசும், இலங்கை அரசும் நாடகமாடுகின்றன' என்று மக்களவையில் அதிமுக குற்றம்சாட்டியது. இக்குற்றச்சாட்டை தற்போது மக்களவைத் துணைத் தலைவராக இருக்கும் மு. தம்பிதுரையே மக்களவையில் பகிரங்கமாக முன்வைத்ததைத் தொடர்ந்து, அவையில் இருந்த வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், எந்த விளக்கமும் அளிக்க முடியாமல் அமைதியானார். "இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு தாக்குதலுக்கு ஆளாகும் தமிழக மீனவர்கள்' என்ற தலைப்பில் மக்களவையில் அதிமுக குழுத் தலைவர் டாக்டர் பி. வேணுகோபால் உள்ளிட்டோர் கொண்டு வந்த சிறப்புக் கவன ஈர்ப்பு நோட்டீஸூக்கு சுஷ்மா ஸ்வராஜ் செவ்வாய்க்கிழமை விளக்கம் அளித்தார். அப்போது "கச்சத்தீவு விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அதுபற்றி நாடாளுமன்றத்தில் விவாதிப்பது பொருத்தமாக இருக்காது' என்று குறிப்பிட்டார்.

இதனால், அதிருப்தி அடைந்த மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனின் சிறப்பு அனுமதி பெற்றுப் பேசியதாவது: மரண தண்டனை விவகாரம்: "முதலாவதாக, ஐந்து தமிழக மீனவர்களுக்கு இலங்கை உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்த போது "அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பொய்யானவை' என்று நமது வெளியுறவுத் துறை அறிவித்தது. தண்டனையை எதிர்த்து இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஐவரும் விடுதலை செய்யப்படுவது உறுதி என்பதை அறிந்த மகிந்த ராஜபட்ச, பிரச்னையில் இருந்து தப்பித்துக் கொள்ள அவசர, அவசரமாக அனைவருக்கும் பொது மன்னிப்பை வழங்கி விடுதலை செய்துள்ளார்.

இலங்கை மீது புகார்: இரண்டாவதாக, இலங்கையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தமிழர் வாக்குகளை பெறுவதற்காக தமிழக மீனவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கும் நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். இதற்கு மத்திய அரசும் துணைபோய் உள்ளது. கச்சத் தீவை மீட்க வேண்டும்: மூன்றாவதாக, கச்சத்தீவு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தைவிட நாடாளுமன்றமே முதன்மையானது. சட்டப்படி மேற்கொள்ளப்படாத ஓர் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஏன் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் விவாதிக்கக் கூடாது? இந்தியாவின் மேற்குவங்கத்துக்குச் சொந்தமான ஒரு சிறிய நிலப் பகுதியை வங்கதேச அரசுக்கு விட்டுக் கொடுக்க மத்திய அரசு இப்போது நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் செய்ய முயற்சி எடுத்து வருகிறதே. அத்தகைய நடவடிக்கை, கச்சத்தீவு விவகாரத்தில் மேற்கொள்ளப்பட்டதா? கச்சத்தீவு இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. அதை எப்படியாவது இந்தியா மீட்டே ஆக வேண்டும்' என்றார் தம்பிதுரை.

மத்திய அரசு விளக்கம்: முன்னதாக, அதிமுக உறுப்பினர்கள் கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்பு நோட்டீஸூக்கு வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அளித்த விளக்கம் வருமாறு: "இலங்கைச் சிறையில் தற்போதுள்ள 38 மீனவர்களை விடுவிக்க அந்நாட்டு அரசுடன் மத்திய அரசு பேசி வருகிறது. இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரை விடுதலை செய்ய மத்திய அரசு அந்நாட்டு அரசாங்கத்தின் மிக உயரிய அளவில் பேச்சு நடத்தியது. அதன் விளைவாக, ஐவருக்கும் பொது மன்னிப்பு வழங்கி இலங்கை அரசு விடுதலை செய்தது. இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 82 படகுகள் உள்ளன. அவற்றை மீட்கவும் உரிய முறையில் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த மாதம் மோசமான வானிலையால் இலங்கைக் கடல் பகுதிக்குச் சென்ற தமிழக மீனவர்கள் மூவரையும், சேதம் அடைந்த அவர்களது படகுகளையும் பழுது நீக்கி தாய்நாட்டுக்கு இலங்கைக் கடற்படை அனுப்பி வைத்தது. மோசமான வானிலையால் கடலில் வழி மாறிச் செல்லும் மீனவர்களின் படகுகளில் தானியங்கி முறையில் அடையாளம் காணும் கருவியைப் பொருத்தி, படகுகளின் நடமாட்டத்தைக் கண்டறியும் வசதி விரைவில் உருவாக்கப்படவுள்ளது' என்றார் சுஷ்மா ஸ்வராஜ்.

கடற்படைத் தளம் அமைக்க வேண்டும்: ஆனால், இந்த விளக்கத்தால் திருப்தியடையாத டாக்டர் வேணுகோபால் பேசியதாவது: "தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையின் அடாவடித்தனம் இன்னும் தொடர்கிறது. தமிழக மீனவர்கள் 5 பேரின் சட்ட உதவிக்காகவும், அவர்களின் குடும்பத்தினரின் நிவாரணத்துக்காகவும் தமிழக அரசு இதுவரை ரூ.63.85 லட்சம் செலவிட்டுள்ளது. மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ரூ.20 லட்சத்தை தமிழக அரசு அனுப்பி வைத்தது. கச்சத்தீவு விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பதை ஒப்புக் கொள்கிறேன். அதேசமயம், முந்தைய காலத்தில் திரிகோணமலையில் வல்லரசு நாடு ஒன்று கடற்படைத் தளம் அமைக்க முற்பட்ட போது அதை தமிழகத்தின் அப்போதைய முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரும், பிரதமராக இருந்த இந்திரா காந்தியும் எதிர்த்தனர். அதே அணுகுமுறையைக் கடைப்பிடித்து கச்சத்தீவை மீட்டு அங்கும், மன்னார் வளைகுடாவிலும் நமது கடற்படையின் தளத்தை ஏன் அமைக்கக் கூடாது? என்று வேணுகோபால் கேள்வி எழுப்பினார். இதேபோன்ற கருத்துகளை அதிமுக உறுப்பினர்கள் குமார் (திருச்சி), ஜெயவர்தன் (தென் சென்னை), கே. கோபால் (நாகப்பட்டினம்) ஆகியோரும் வலியுறுத்திப் பேசினர். உத்தர பிரதேசத்தை சேர்ந்த சம்பால் தொகுதி பாஜக உறுப்பினர் சத்யபால் சிங்கும் இந்த விவாதத்தில் பங்கேற்று, "கச்சத்தீவு தொடர்பாக இலங்கையுடன் மத்திய அரசு மேற்கொண்ட ஒப்பந்தம் குழப்பம் வாய்ந்தது. அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என்று வலியுறுத்தினார்.

திகைப்பு: இதையடுத்து, சுஷ்மா ஸ்வராஜ் அளித்த விளக்கத்தால் அதிருப்தியடைந்த தம்பிதுரை, இலங்கை அரசும், மத்திய அரசும் நாடகமாடுவதாகக் குற்றம்சாட்டிப் பேசினார். மக்களவைத் துணைத் தலைவராக இருக்கும் அவர் சுமத்திய குற்றச்சாட்டால் அவையில் இருந்த பாஜக உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள் பதில் கூற முடியாமல் திகைத்தபடி இருக்கையில் அமர்ந்து ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies