இலங்கை அதிபர் ராஜபட்ச பாதுகாப்பாக திருமலையை அடைந்தார். திருமலை ஏழுமலையானை தரிசிக்க, இலங்கை அதிபர் மஹிந்த ராஜபட்ச, தனது குடும்பத்தினருடன் செவ்வாய்க்கிழமை மாலை, ரேணிகுண்டா விமான நிலையத்துக்கு வந்தார். பிறகு, ரேணிகுண்டா விமான நிலையத்திலிருந்து ஹெலிபேட் மூலம், திருப்பதி என்.டி.ஆர் மைதானத்துக்கு வந்த அவர், திருப்பதியிலிருந்து சாலை மார்கமாக திருமலைக்குச் சென்றார். திருமலைக்கு சென்ற அவரை, தேவஸ்தான அதிகாரிகள் மலர்ச் செண்டு அளித்து வரவேற்று, திருமலையில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா விருந்தினர் மாளிகையில் தங்க வைத்தனர். புதன்கிழமை அதிகாலை, சுப்ரபாத சேவையில் ஏழுமலையானை தரிசிக்கும் அவர், அதையடுத்து காலை 9.30 மணிக்கு தனி விமானம் மூலம் கொழும்பு புறப்பட்டுச் செல்ல உள்ளார்.
அவருடைய வருகையை ஒட்டி, சிறப்புப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. சுமார் 500 கேரஹவுண்ட்ஸ் படையினர், வெடிகுண்டு அகற்றும் படையினர், மோப்ப நாய்ப் பிரிவு படையினர் என பலர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். இலங்கையில் ஹிந்து சமய கோயில்களை இடித்துத் தரைமட்டமாக்கி, பல ஹிந்துக்களை கொன்ற ராஜபட்ச ஏழுமலையானை தரிசிக்க திருப்பதிக்கு வரக்கூடாது என மதிமுக, ஆந்திர விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் உள்ளிட்டோர் திருப்பதி பேருந்து நிலையம் அருகில் உள்ள அம்பேத்கர் சிலை அருகில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸôர் கைது செய்து ரகசியமாக வைத்துள்ளனர்.
ராஜபட்சவின் வருகையை முன்னிட்டு, திருமலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சாதாரண பக்தர்கள் திருமலையில் உலவ தடை விதிக்கப்பட்டுள்ளது. ராஜபட்ச புதன்கிழமை, சுப்ரபாத சேவையில் கலந்து கொள்ளவுள்ளதால் அந்தச் சமயம் கோயிலுக்குள் அங்கப்பிரதட்சணம் செய்ய பக்தர்களுக்கு தேவஸ்தானம் தடை விதித்துள்ளது.