மதுராந்தகம் அடுத்த ஜானகி புரம் பகுதியில் தனியார் தோட்டத்தில், கொத்தடிமைகளாக பணிபுரிந்து வந்த 6 பெண்கள் மற்றும் 4 மாத குழந்தை உட்பட 16 பேரை கோட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் நேற்று மீட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அடுத்த ஜானகிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் (33). இவரது தோட்டத்தில், மதுராந்தகம் அடுத்த அரையப்பாக்கம், தண்டலம் ஆகிய கிராமங்களை சேர்ந்த 16 பேர், கடந்த 10 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக பணிபுரிந்து வருவதாக தேசிய ஆதிவாசிகள் தோழமை கழகம் என்ற அமைப்புக்கு தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து, அந்த அமைப்பினர் ரகசியமாக தகவல்களை திரட்டி, மதுராந்தகம் கோட்டாட்சியரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, கோட்டாட்சியர் பர்கத் பேகம் உத்தரவின் பேரில், வருவாய்த் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது கொத்தடிமைகளாக இருந்த 6 பெண்கள் மற்றும் 4 மாத குழந்தை உட்பட 16 பேரை மீட்டு, கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர்.
அங்கு, மீட்கப்பட்ட நபர்களின் 8 குடும்பத்துக்கும் தலா ரூ.1000 உதவித் தொகை வழங்கப்பட்டது. மீட்கப்பட்டவர்களுக்கு குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை தேவைகள் நிறைவேற்றித் தரப்படும் என கோட்டாட்சியர் தெரிவித்தார். பின்னர், அனைவரும் சொந்த கிராமத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தோட்ட உரிமையாளரை மதுராந்தகம் போலீஸார் கைது செய்தனர்.
Keywords: மதுராந்தகம், கொத்தடிமைகள் மீட்பு