BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Friday 7 November 2014

ஜாதிவாரி கணக்கெடுப்பு சட்டவிரோதம் : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

"ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது சட்டவிரோதமானது' என்று உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. மேலும், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும்படி மக்கள்தொகைப் பதிவாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் 2010-இல் பிறப்பித்த உத்தரவையும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இதுதொடர்பாக மக்கள் தொகைப் பதிவாளர் சார்பில் 2012-இல் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரோஹின்டன் ஃபாலி நாரிமன், யு.யு. லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு வெள்ளிக்கிழமை அளித்த தீர்ப்பு விவரம் வருமாறு:

அரசு நடவடிக்கை சரியே: மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடவடிக்கையில் எந்தெந்த விவரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற கொள்கை முடிவின்படி 2000, ஜனவரி 13-இல் ஓர் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், குடும்பத் தலைவர் ஆணா, பெண்ணா? அவர் தலித் வகுப்பினரா? அல்லது பழங்குடியின வகுப்பினரா? அல்லது வேறு வகுப்பினரா? என்பதை மட்டும் பதிவு செய்ய வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது. எந்த ஜாதியை சேர்ந்தவர் என்ற விவரத்தைப் பதிவு செய்வது குறித்து எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. மேலும், 2010-இல் அரசு எடுத்த கொள்கை முடிவின்படி வெளியிடப்பட்ட மற்றொரு அரசாணையில் மேற்கண்ட விவரத்துடன், வீட்டில் வசிப்பவர்கள் விவரம், திருமண நிலை, குடிநீர் வசதி, குடியிருப்பில் உள்ள கழிப்பறை வசதிகள், கழிவுநீர் வசதிகள், சமையல் எரிவாயு, தொலைக்காட்சி, வானொலி, தொலைபேசி, கைப்பேசி, வாகனங்கள் போன்றவை தொடர்பான விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது. 

வரம்பு மீறிய உயர் நீதிமன்றம்: இதுதொடர்பான ஆவணங்களைச் சரியாக ஆராயாமல் சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும்படி மக்கள்தொகை கணக்கெடுப்பு பதிவாளருக்கு 2010-இல் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, அதன் அதிகார வரம்பை மீறிய செயலாகும். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் நடவடிக்கை சட்டவிரோதமானதாகும். அரசின் கொள்கை முடிவுகள் சரியா, தவறா என்பது குறித்து நீதிமன்றங்கள் கருத்துக் கூறலாமே தவிர, அவற்றை மாற்றியமைக்கும் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது. இந்த வழக்கை உணர்வுப்பூர்வமாக அணுகியுள்ள சென்னை உயர் நீதிமன்றத்தின் நடவடிக்கையை சட்டம் அனுமதிக்காது. ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். பின்னணி: "1931-ஆம் ஆண்டுக்குப் பிறகு அரசியல், சமூக, பொருளதார ரீதியில் பின்தங்கியுள்ள மக்களைக் கண்டறிய வேண்டியது அவசியம். எனவே, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்' என 2008-இல் மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், அந்த உத்தரவை மத்திய அரசு பின்பற்றவில்லை எனக் கூறி சமூக நீதிப் பேரவையின் வழக்குரைஞர் கே. பாலு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில், "எந்தெந்த ஜாதியை சேர்ந்தவர்கள் எவ்வளவு பேர் உள்ளனர்? பழங்குடியினர், தலித்துகள் விவரங்கள் கணக்கெடுக்கப்படுவதைப்போல பிற வகுப்பினரும் எவ்வளவு பேர் உள்ளனர் என்ற கணக்கெடுப்பு நடத்த பரிசீலிக்க வேண்டும்' என்று மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, "மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் பதிவு செய்ய வேண்டிய விவரங்கள் தொடர்பான படிவங்கள் ஏற்கெனவே (2010, ஏப்ரல்) அச்சடிக்கப்பட்டு மாநிலங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. அதனால், 2011-ஆம் ஆண்டில் நடத்தப்படும் கணக்கெடுப்பின் போது அரசின் கொள்கை முடிவின்படி தலித், பழங்குடியினர், பிற வகுப்பினர் என்ற விவரத்தை மட்டுமே பதிவு செய்ய முடியும்' என்று நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கைத் தொடர்ந்த பாலுவுக்கு மத்திய அரசு பதில் அனுப்பியது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி தொடுத்த வழக்கில், முந்தைய உத்தரவின்படியே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்' என உயர் நீதிமன்றம் 2010-இல் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து மக்கள்தொகைப் பதிவாளர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 2012-இல் மேல்முறையீடு செய்யப்பட்டது.

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies