"கங்கை நதியைத் தூய்மைப்படுத்தும் திட்டம் தொடர்பாக நடைபெற்ற ஒரு நாள் ஆலோசனைக் கூட்டத்துக்கு செலவு செய்யப்பட்ட ரூ.44 லட்சம் வீணடிக்கப்படவில்லை' என்று மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமா பாரதி விளக்கம் அளித்துள்ளார். தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அந்த ஆலோசனைக் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை இந்திய சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் கவனித்தது. செலவுத் தொகை முழுவதும் அரசின் நிறுவனமான இந்திய சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்திடம் கொடுக்கப்பட்டது. அந்த நிறுவனம் தனியாருக்குச் சொந்தமானது அல்ல. அரசின் நிதியானது, அரசிடமே சென்று சேர்ந்துவிட்டது. எனவே, அந்தத் தொகை வீணடிக்கப்படவில்லை என்றார் உமா பாரதி.
முன்னதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு அரசு அளித்த பதிலில், "கங்கை நதி தூய்மைத் திட்டம் தொடர்பாக, தில்லி விஞ்ஞான் பவனில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற ஒரு நாள் கூட்டத்துக்கு ரூ.44 லட்சம் செலவிடப்பட்டது. அதில், விருந்தினர்கள் தங்குவதற்கு ரூ.26.7 லட்சமும், அதிகாரிகளின் பயணத்துக்கு ரூ.8.8 லட்சமும், விளம்பரத்துக்காக ரூ.5.1 லட்சமும் செலவிடப்பட்டது' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பான கேள்விக்கு அமைச்சர் உமா பாரதி மேற்கண்டவாறு பதிலளித்தார்.