இந்தியாவைச் சேர்ந்த புராதன கலைப் பொருள்கள் வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்லப்படுவது குறித்து உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
கொல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகத்தில் கலைப்பொருள் பாதுகாப்பு அதிகாரியாக சுனில்குமார் உபாத்யாய என்பவர் பணியாற்றி வந்தார். அருங்காட்சியகத்தில் நடைபெற்ற ஊழல்களை அம்பலப்படுத்தி வந்த இவர், சமீபத்தில் காணாமல் போய்விட்டார். இந்நிலையில், சுனில்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடக் கோரி, ஆட்கொணர்வு மனுவை அவரது உறவினர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் செலமேஸ்வர், எஸ்.ஏ.பாப்டே ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அப்போது மூத்த வழக்குரைஞர் துஷ்யந்த் தவே வாதிட்டார். அவர் கூறியதாவது: இந்தியாவைச் சேர்ந்த புராதன கலைப் பொருள்கள் கடத்தப்பட்டு, வெளிநாடுகளைச் சேர்ந்த சோத்பிஸ், கிறிஸ்டிஸ் போன்ற ஏல நிறுவனங்களுக்குச் செல்வதாக மத்திய தலைமைத் தணிக்கையாளர் அமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகம் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள அனைத்து அருங்காட்சியகங்களிலும் இதுபோன்ற குறைபாடுகள் உள்ளன என்று துஷ்யந்த் தவே கூறினார். அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டுக் கூறுகையில், இந்தியக் கலைப்பொருள்கள் வெளிநாடுகளைச் சென்றடைவதற்கு கவலை தெரிவித்தனர். ""கொல்கத்தா அருங்காட்சியகத்துக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இது குறித்து எந்தவிதமான விசாரணை நடத்துவது என்பது பிறகு முடிவு செய்யப்படும்'' என்று நீதிபதிகள் கூறினர்.