முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங் புதன்கிழமை ஜப்பான் நாட்டின் உயரிய விருதை பெற்றார். இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் சிறப்பாக பங்காற்றியதற்காக "தி கிராண்ட் கார்டன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி பாலோனியா ஃபிளவர்ஸ்' என்ற இந்த விருது மன்மோகன் சிங்குக்கு வழங்கப்பட்டது. இந்த விருதைத் பெறும் முதல் இந்தியர் மன்மோகன் சிங் என்பது குறிப்பிடத்தக்கது. விருதைப் பெற்ற பிறகு மன்மோகன் சிங், அவரது மனைவி குர்சரண் ஆகியோர் அந்நாட்டு மன்னர் அகிஹிடோ, அரசி மெஸிகோ ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதிய விருந்தில் கலந்து கொண்டனர். இந்த விருதுக்காக தேர்வு செய்யப்பட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த 57 முக்கிய தலைவர்களில் மன்மோகன் சிங்கும் ஒருவராவார்.
முன்னதாக, இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டது குறித்து அவர் கூறியதாவது: ஜப்பான் அரசும், அந்நாட்டு மக்களும் என் மீது கொண்டுள்ள அன்பால் பெருமையடைகிறேன். இந்திய-ஜப்பான் உறவுகள் மேலும் மேம்பட வேண்டும் என்பதே எனது கனவு. இதற்காகவே நான் பாடுபட்டேன். என்னுடைய ஆட்சிக் காலத்தில் மட்டுமல்ல, எனது பொதுவாழ்விலும் இதற்காகவே பாடுபட்டிருக்கிறேன் என்று மன்மோகன் சிங் தெரிவித்தார். பிரணாப், மோடி வாழ்த்து: இந்நிலையில், இந்த விருதைப் பெற்றுள்ளதற்காக மன்மோகன் சிங்குக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.