இலங்கை அதிபர் தேர்தலில் மூன்றாவது முறையாக தான் போட்டியிடுவது குறித்து, அந்த நாட்டு உச்ச நீதிமன்றத்திடம் அதிபர் மகிந்த ராஜபட்ச கருத்து கேட்டுள்ளார். இதுகுறித்து ராஜபட்ச உச்ச நீதிமன்றத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், மீண்டும் அவர் அதிபர் பதவியை ஏற்பதற்குத் தடையாக, சட்டச் சிக்கல் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து இம்மாதம் 10-ஆம் தேதி, அல்லது அதற்கு முன்னதாக தெரியப்படுத்துமாறு கோரியுள்ளதாக இலங்கை ஊடகங்கள் புதன்கிழமை தெரிவித்தன. ராஜபட்சவின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு முடிவடையும் நிலையில், ஒரு ஆண்டுக்கு முன்னரே அவர் அதிபர் தேர்தலை நடத்த விரும்புவதாகத் தெரிகிறது.
தேர்தல் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு, அவரது பதவிக் காலம் நான்கு ஆண்டுகளைப் பூர்த்தி செய்யும் நவம்பர் 18-ஆம் தேதிக்குப் பிறகு வெளியிடப்படலாம். அந்தத் தேர்தலில் ராஜபட்ச மீண்டும் போட்டியிட முடியாது என எதிர்க் கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், உச்ச நிதிமன்றம் இந்த விவகாரத்தில் தெரிவிக்கும் கருத்து, மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.