உடன்குடி அனல் மின் திட்டத்தின் ஒன்றாம் நிலைக்கான பணிகளுக்கு டிசம்பர் இறுதியில் உத்தரவு வழங்கப்பட்டு, விரைவில் பணிகள் தொடக்கப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் தெரிவித்தார். மின்சாரத் துறையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பாக, துறையின் அதிகாரிகளுடன் அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் சென்னையில் ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து, தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: எண்ணூர் அனல் மின் திட்ட விரிவாக்கம் ரூ.4,956 கோடியிலும், எண்ணூர் சிறப்புப் பொருளாதார மண்டல அனல் மின் திட்டம் ரூ.7,920 கோடியிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், உடன்குடி அனல் மின் திட்டத்தின் ஒன்றாம் நிலைக்கான பணிகள் ரூ.10,121 கோடியில் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன் கட்டுமானப் பணிக்கான உத்தரவு வரும் டிசம்பர் இறுதிக்குள் வழங்கப்பட்டு, பணிகள் விரைவில் தொடங்கப்படும். அனுமதி பெற வேண்டிய பணிகள்: ராமநாதபுரம் மாவட்டம், உப்பூரில் 1,600 மெகாவாட் திறனும், வடசென்னை மூன்றாம் நிலை மின் திட்டம், எண்ணூர் மாற்று அனல் மின் திட்டம், உடன்குடி இரண்டாம், மூன்றாம் நிலை அனல் மின் திட்டம் ஆகியவற்றுக்கான அனுமதிகளைப் பெறும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நிகழ் நிதியாண்டில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் மூலம் 230 மெகாவாட் மின்சாரமும், தூத்துக்குடியில் நடைபெற்று வரும் அனல் மின் நிலைய விரிவாக்கத்தின் மூலம் 387 மெகாவாட்டும், வல்லூரில் அனல் மின் நிலையத் திட்டத்தின் மூன்றாவது அலகின் மூலம் 500 மெகாவாட் மின்சாரமும் விரைவில் கிடைக்கும்.
கூடங்குளம் திட்டம்: கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதல் அலகு ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறனை கடந்த ஜூலை மாதம் எட்டியுள்ளது. இதில், தமிழகத்தின் பங்கு 562 மெகாவாட்டாகும். எனவே, இந்த நிதியாண்டிலேயே ஆயிரத்து 529 மெகாவாட் கூடுதல் மின் நிறுவு திறன் உருவாக்கப்படும் என அரசு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சார வாரிய ஆய்வுக் கூட்டத்தில் அதன் தலைவர்-மேலாண் இயக்குநர் ஞானதேசிகன் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.