மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தின் முதல் படியாக, ஆளில்லா விண்கலத்தைச் செலுத்தவுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் இயக்குநர் எம்.வி.எஸ்.பிரசாத் தெரிவித்தார். ஆந்திரம் மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் பேசியது: இந்த ஆளில்லா விண்கலத்தை ஜிஎஸ்எல்வி எம்.கே.3 ராக்கெட் தாங்கி செல்கிறது. இதுவரை விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட்டுகளில் இது அதிக எடைகொண்டதாகும். இதன் எடை 613 டன். மேலும் ராக்கெட் தாங்கிச் செல்லும் ஆளில்லா விண்கலம் 3735 கிலோ எடை கொண்டதாகும். இதன் உயரம் 2.7 மீட்டர், வட்டம் 3.1 மீட்டர் சுற்றளவில் தயாரிக்கப்பட்டது. மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் முதல்படி இதுவாகும். இந்த ஆளில்லா விண்கலம் டிசம்பர் மாதம் 15 தேதியில் இருந்து 20 ஆம் தேதிக்குள் விண்வெளிக்கு அனுப்பி சோதிக்கப்படும்.
இந்தச் சோதனையின் வெற்றியைப் பொருத்தே விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டம் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லப்படும். எனினும், இன்னும் இரண்டு ஆண்டுகளில் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை இந்தியா நிறைவேற்றும் எப்படி செல்லும்?: ஆளில்லா விண்கலத்தை ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஏந்திக்கொண்டு விண்வெளிக்குச் செல்லும். தரையிலிருந்து 126 கிலோ மீட்டர் சென்ற பிறகு, விண்வெளியில் விண்கலம் ராக்கெட்டில் இருந்து பிரியும். பின்பு அங்கிருந்து 3 ஆயிரம் திசை வேகத்தில் (ஸ்ங்ப்ர்ஸ்ரீண்ற்ஹ்) பூமிக்குத் திரும்பும். பூமியை நெருங்க நெருங்க திசையின் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்டு 15 வது கிலோ மீட்டரில் பாரசூட் திறக்க ஆரம்பிக்கும். பின்பு 8 ஆவது கிலோ மீட்டரில் பாரசூட் 2-ஆவது கட்டமாக திறக்கும். கடைசியில் பூமியின் அருகே 4 கிலோ மீட்டர் நெருங்கும்போது பாரசூட் 3 ஆவது கட்டமாக திறக்கும். இறுதியாக ஆளில்லா விண்கலம் கடலில் விழும். பின்பு, கடலோரக் காவல் படையினரின் உதவியோடு விண்கலம் மீட்கப்படும் என்றார் எம்.எஸ்.வி.பிரசாத்.
வெப்பம் தாங்கும் சக்தி: ஆளில்லா விண்கலம் விண்வெளியின் வெப்பத்தை தாங்கும் சக்தி கொண்டுள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக இத்திட்டத்தின் இயக்குநர் சோம்நாத் கூறினார். அவர் மேலும் கூறியது. பூமியில் இருந்து 80 கிலோ மீட்டர் மேலே சென்றுவிட்டாலே அவை விண்வெளி என அழைக்கப்படும். நாம் கிரயோஜினிக் எஞ்ஜின் பொருத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி ராக்கெட்டில் ஆளில்லா விண்கலத்தை பூமியில் இருந்து 126 கிலோ மீட்டருக்கு கொண்டு செல்ல முடியும். அங்கு கிட்டத்தட்ட ஆயிரம் டிகிரி செல்சியஸ் வெப்பம் இருக்கும். மேலும் அந்த இடத்தில் காற்றோட்டமும் இருக்காது. எனவே இந்த ஆளில்லா விண்கலத்தின் மேல்பாகம் சிலிகான் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மனிதனை வைத்து விண்கலத்தைச் செலுத்தும்போது, விண்வெளியின் வெப்பம் பாதிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி, மனிதனை விண்வெளிக்கு அனுப்பவுதற்கு முன்பாக மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு ஒத்திகை என்று கூட கூறலாம். இந்த ஆளில்லா விண்கலம் மூன்று பேர் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சோதனைக்கு ரூ.40 கோடி செலவிடப்பட்டுள்ளது என்றார் சோம்நாத்.
சில முக்கிய அம்சங்கள் :
- ஆளில்லா விண்கலத்தின் செயல்பாடு சதீஷ் தவண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து இயக்கப்படும்.
- 1,10,000 கிலோ திரவ எரிபொருள் மூலம் ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஏவப்படும்.
- சி25 கிரயோஜனிக் எஞ்ஜின் பயன்படுத்தப்படுகிறது.
- மிகப்பெரிய பாரசூட் முதல் முறையாக ஆளில்லா விண்கலத்தைத் தரையிறக்கப் பயன்படுத்தப்படுகிறது.
அபாயம் : 126 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து, அதாவது விண்வெளியில் ஆளில்லா விண்கலம் அதன் ஈர்ப்பு விசை மாறாமல் இருப்பதற்காகவே அதன் செயல்பாடுகள் சதீஷ் தவண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. அப்போதுதான் ஆளில்லா விண்கலத்தின் கோணம் மாறாமல் இருக்கும். அப்படி அந்தக் கோணம் மாறினால், விண்வெளியின் வெப்பம் விண்கலத்தைப் பொசுக்கிவிடும். ஆனால், அது போன்ற சம்பவங்கள் நிகழ வாய்ப்பில்லை என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்தச் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றால்தான், மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் அடுத்தக் கட்டத்துக்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.