வெனிசூலாவின் பார்க்கிஸிமிடோ நகரில் உள்ள சிறைச்சாலையில் நடைபெற்ற கலவரத்தைத் தொடர்ந்து நிகழ்ந்த சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. பார்க்கிஸிமிடோ நகரின் சிறையில் அளவுக்கு மீறி கைதிகளின் எண்ணிக்கை உள்ளதை எதிர்த்து, கைதிகள் திங்கள்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டனர். பின்னர் அங்கு திடீரென கலவரம் வெடித்தது. இதையடுத்து, சிறை மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைந்த ஏராளமான கைதிகள், அங்கிருந்த மருந்துகளை உட்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதில் இறந்தவர்கள் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இருபது பேர் நிலை கவலைக்கிடமளிப்பதாக உள்ளது. அவர்கள் எந்த விதமான மருந்துகளை உட்கொண்டனர் என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக, சிறை வார்டன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறை விவகாரங்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழுத் தலைவர் கூறினார். "டேவிட் விலோரியா' எனும் பெயர் கொண்ட சிறைச்சாலையில் 850 கைதிகளை சிறைவைக்கலாம். ஆனால் தற்போது சுமார் 3,700 பேர் இந்தச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதே சிறையில் கடந்த ஆண்டு நடைபெற்ற கலவரத்தில் 58 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத் தகுந்தது.