நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் மாயமானது தொடர்பான தகவல்களை வெளியிட பிரதமர் அலுவலகம் மறுத்துவிட்டது. இந்தத் தகவல்களை வெளியிட்டால், அயல்நாடுகளுடனான உறவு பாதிக்கப்படும் என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. "நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் மாயமானது தொடர்பான தகவல்களை மத்திய அரசு வெளியிட வேண்டும்' என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சுபாஷ் அகர்வால் என்பவர் கோரியிருந்தார். இதற்கு பிரதமர் அலுவலகம் அண்மையில் அளித்த பதிலில் தெரிவித்துள்ளதாவது: நேதாஜி மாயமானது தொடர்பாக மொத்தம் 41 கோப்புகள் உள்ளன. இவற்றில், 20 கோப்புகள் ரகசியமானவையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கோப்புகளில், நேதாஜியின் பிறந்த இடமான ஜானகிநாத் பவனை அப்போதைய ஒடிசா அரசு கையகப்படுத்தியது, நேதாஜியின் மறைவு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவுக்கும், அவரது மனைவி, மகளுக்கும் இடையே நடந்த கடிதப் போக்குவரத்து உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
மிகவும் ரகசியமானவையாக வகைப்படுத்தப்பட்டுள்ள 4 கோப்புகளில், நேதாஜியின் அஸ்தி இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது தொடர்பாக அவரது மனைவி, மகளுடன் நடைபெற்ற கடிதப் போக்குவரத்து, நீதிபதி முகர்ஜி குழுவின் விசாரணை தகவல்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. தேசிய ஆவணக் காப்பகத்துக்கு அனுப்பப்பட்டுள்ள அந்தக் கோப்புகளில் உள்ள தகவல்களை வெளியிட்டால், அயல்நாடுகளுடனான உறவு பாதிக்கப்படும். எனவே, தகவல் அறியும் உரிமைச் சட்டப்பிரிவு 8(1)ன் படி இந்தத் தகவல்களை வெளியிட முடியாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, ஒடிஸா மாநிலம், கட்டாக்கில் நடந்த நேதாஜியின் 117-ஆவது பிறந்த தின நிகழ்ச்சியில் பேசுகையில், "நேதாஜி மாயமானது தொடர்பான ஆவணங்கள் அடிப்படையிலான தகவல்களை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்' என்று வலியுறுத்தி இருந்தார். ஆனால், நேதாஜி மாயமானது குறித்த தகவல்களை பாஜக தலைமையிலான தற்போதைய மத்திய அரசு வெளியிட மறுப்பது குறிப்பிடத்தக்கது.