இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 5 தமிழக மீனவர்களை அந்நாட்டுக்கான இந்தியத் தூதர் யஷ் சின்ஹா செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். மீனவர்களை விரைவில் இந்தியாவுக்கு மீட்டு வருவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். இதுகுறித்து, தில்லியில் இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதீன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கொழும்பில் உள்ள வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 5 பேரை, சிறைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இந்தியத் தூதர் யஷ் சின்ஹா, செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். அவர்கள் அனைவரும் நல்ல உடல் நலத்துடன் உள்ளனர். அவர்களுக்குத் தேவையான உடைகள் உள்ளிட்ட பொருள்களை தூதர் வழங்கினார். தங்களை நேரில் சந்தித்துப் பேசியதால் மகிழ்ச்சியடைந்த மீனவர்கள், யஷ் சின்ஹாவுக்கு நன்றி தெரிவித்தனர்.
இந்த வழக்கில் மீனவர்களுக்கு இந்திய அரசு ஆதரவு அளிக்கும் என்றும், அவர்களை விரைவில் விடுவித்து, இந்தியாவுக்கு அழைத்து வர அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு எடுக்கும் என்றும் யஷ் சின்ஹா உறுதியளித்தார். அப்போது, தமிழகத்தில் உள்ள உறவினர்களிடம் தொலைபேசி மூலம் பேசுவதற்கு அனுமதியளிக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, இன்னும் ஓரிரு நாள்களில், அவர்கள் தொலைபேசி மூலம் பேசுவதற்கு ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்று சிறை அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
மேலும், தங்கள் உறவினர்களுக்குக் கடிதம் அனுப்பவும் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று சையது அக்பருதீன் தெரிவித்தார். போதைப்பொருள் கடத்தியதாக கடந்த 2011ஆம் ஆண்டு இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் எமர்சன், அகஸ்டஸ், வில்சன் கே.பிரசாத், ஜே.லாங்லட் ஆகியோருக்கு கொழும்பு நீதிமன்றம் கடந்த 30ஆம் தேதி மரண தண்டனை விதித்தது. இந்த விவகாரம், இந்திய-இலங்கை உறவில் நெருடலை ஏற்படுத்தியுள்ளதுடன், தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மீனவர்களை மீட்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.