மரண தண்டனை நிறைவேற்றத்தை உலக நாடுகள் தாற்காலிகமாக நிறுத்தி வைப்பது குறித்து ஐ.நா. பொதுச் சபை முன் வைக்கப்பட்ட தீர்மானத்தை எதித்து இந்தியா வாக்களித்துள்ளது. தங்கள் சட்டங்களைப் பயன்படுத்தி குற்றவாளிகளைத் தண்டிக்கும் நாடுகளின் உரிமையை அந்தத் தீர்மானம் புறக்கணிப்பதால் அதனை எதிர்த்ததாக இந்தியா விளக்கமளித்துள்ளது. சமூக, மனிதாபிமான, கலாசார விவகாரங்களை கவனித்து வரும் ஐ.நா.வின் மூன்றாவது குழு, குறிப்பிட்ட சிலருக்கான மரண தண்டனை நிறைவேற்றத்தை தாற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு உலக நாடுகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியது. 18 வயதுக்கு உள்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், மன நலன் அல்லது அறிவுத் திறன் பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கான மரண தண்டனை நிறைவேற்றத்தை உறுப்பு நாடுகள் தாற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என அந்தத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக 114 நாடுகளும், எதிராக 36 நாடுகளும் வாக்களித்தன. 34 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்த 36 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இதுகுறித்து, ஐ.நா.வுக்கான இந்தியத் தூதுக்குழுவின் முதன்மைச் செயலர் மயங்க் ஜோஷி அளித்த விளக்கம்: மரண தண்டனையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்துடனேயே அந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அது இந்தியாவின் சட்டக் கொள்கைக்கு முற்றிலும் எதிரானது. சட்டதிட்டங்களை வகுப்பதற்கும், குற்றவாளிகளை அந்தச் சட்டப்படி தண்டிப்பதற்கும் ஒவ்வொரு நாட்டுக்கும் முழு உரிமை உள்ளது. அந்த உரிமை இந்தத் தீர்மானத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் "அரிதிலும் அரிதான' வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை விதிக்கப்படுகிறது. தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்பு நியாயமான விசாரணைக்கும், மேல் முறையீட்டுக்கும் வழிவகை உள்ளது. ஏற்கெனவே, கர்ப்பிணிகளுக்கான மரண தண்டனையை நிறுத்தி வைப்பதற்காகவும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மரண தண்டனைக்குத் தடை விதித்தும் இந்தியச் சட்டத்தில் பல பிரிவுகள் உள்ளன.
இந்தியச் சட்டப்படி 18 வயதுக்குள்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்க முடியாது. உச்ச நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் இந்தியாவில் மரண தண்டனை நிறைவேற்றப் படுவதில்லை என்றார் மயங்க் ஜோஷி.