நாடு முழுவதும் "செம்மொழிகள் வாரம்' கொண்டாட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் வலியுறுத்தினார். இது தொடர்பாக மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து அவர் பேசியதாவது: மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஆகஸ்ட் 2-ஆவது வாரத்தில் "சம்ஸ்கிருத வாரம்' கொண்டாட மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிஎஃப்எஸ்இ) பள்ளிகளுக்கு ஆணையிட்டுள்ளது. அரசியல் சட்டத்தின் எட்டாவது பிரிவில் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு மொழியை மட்டும் கொண்டாட வேண்டும் என்று அரசு கூறியுள்ளது வியப்பாக உள்ளது. மேலும், சம்ஸ்கிருதம் செம்மொழி என்றும் கூறியுள்ளது. தமிழ் உள்பட ஐந்து மொழிகள் செம்மொழி அந்தஸ்தைப் பெற்றுள்ளன என்பதை அரசின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். "செம்மொழிகள் வாரம்' என்று கொண்டாடப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் அப்பொழுதே வலியுறுத்தினார்.
ஆனால், மத்திய அரசு சம்ஸ்கிருதத்தை மட்டுமே முன்னிலைப்படுத்துகிறது. அதை மட்டுமே செம்மொழியாகக் கருதுகிறது. சம்ஸ்கிருத வாரம் மட்டும் கொண்டாடவில்லை. அத்துடன், "குரு உத்ஸவ்' கொண்டாடுவது மேலும் சந்தேகத்தை உறுதிப்படுத்தியுள்ளது. மக்கள் மத்தியில் உருவாகியுள்ள இந்த ஐயத்தைப் போக்க "செம்மொழிகள் வாரம்' கொண்டாடப்படும் என்று மத்திய அரசு அறிவிக்க வேண்டும். மாநிலங்கள் விரும்புக்கூடிய மொழிகளை கொண்டாட இது வழிவகுக்கும் என்றார் டி.கே. ரங்கராஜன்.