இலங்கையில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலைக் கண்காணிக்க, வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு அழைப்பு விடுக்கவிருப்பதாகக் கூறியுள்ள அந்த நாட்டு அரசு, ஐ.நா. அதிகாரிகளை அழைக்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையர் மகிந்த தேசப்பிரிய கூறியதாவது:
நடைபெறவிருக்கும் தேர்தலைக் கண்காணிப்பதற்காக ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட வெளிநாட்டுக் குழுக்களுக்களை அழைக்க முடிவு செய்துள்ளோம். எனினும், இந்தத் தேர்தலில் ஐ.நா. கண்காணிப்பாளர்களை அழைக்கப் போவதில்லை. பொதுவாக, ஆசிய, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள்தான் தேர்தலைக் கண்காணிப்பார்கள். ஒரு நாட்டில் முதல் முறையாகத் தேர்தல் நடைபெறும்போதும், தேர்தலில் முறைகேடுகள் நிகழும் அபாயம் இருக்கும் போதும்தான் ஐ.நா. குழு கண்காணிப்புப் பணியை மேற்கொள்ளும்.
இலங்கையில், தற்போது அத்தகைய சூழல் இல்லை என்பதால், ஐ.நா. கண்காணிப்புக் குழுவின் அவசியம் இல்லை என்றார் அவர். இலங்கையில், அதிபர் ராஜபட்சவின் பதவிக் காலம் முடிவடைவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே அந்த நாட்டில் பொதுத் தேர்தலை நடத்த அவர் முடிவு செய்தார். அதனைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு ஜனவரி 8-ஆம் தேதி பொது வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதற்கு முன்னதாக, வரும் டிசம்பர் மாதம் 23, 24 ஆகிய தேதிகளில் தபால் வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் ஆணையம் அறிவித்தது.