மின் துறையில் ஒத்துழைப்பது தொடர்பாக "சார்க்' அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தம் வியாழக்கிழமை கையெழுத்தானது. நேபாளத் தலைநகர் காத்மாண்டில் புதன்கிழமை தொடங்கிய தெற்காசிய நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்புக் கூட்டமைப்பின் ("சார்க்') 18-ஆவது உச்சி மாநாடு வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தது. நிறைவு நாளன்று, சார்க் நாடுகளுக்கு இடையே மின் துறையில் ஒத்துழைப்பது தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது. அதேசமயம், சார்க் நாடுகளின் மக்களிடையே தொடர்புகளை அதிகரிப்பதற்காக மோட்டார் வாகனங்கள், ரயில் போக்குவரத்து தொடர்பாக கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட ஒப்பந்தம் கையெழுத்திடப்படவில்லை.
இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படுவதன் மூலம், மாநாட்டை வெற்றியடையச் செய்வதற்கு நேபாளத் தலைவர்கள் பெரும் முயற்சி எடுத்து வந்தனர். ஆனால், அவர்கள் எதிர்பார்த்தது போல ஒப்பந்தம் கையெழுத்திடப்படாதது, நேபாளத் தலைவர்களிடையே சிறிது ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து நேபாளப் பிரதமர் சுஷில் கொய்ராலா பேசுகையில், "மோட்டார் வாகனங்கள், ரயில் போக்குவரத்து தொடர்பான ஒப்பந்தங்களுக்கு அனுமதி பெறுவதற்கு 3 மாத கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது' என்றார். மோட்டார் வாகனங்கள், ரயில் போக்குவரத்து தொடர்பாக ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படாததற்கு பாகிஸ்தானின் எதிர்ப்பே காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால், இதை அந்நாட்டு வெளியுறவு அமைச்சம் மறுத்துள்ளது. இஸ்லாமாபாதில் அடுத்த சார்க் மாநாடு: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் அடுத்த சார்க் மாநாடு அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை நேபாளப் பிரதமர் சுஷில் கொய்ராலா வெளியிட்டார்.
மோடி, ஷெரீஃப் நலம் விசாரித்தனர்
சார்க் மாநாட்டின் நிறைவு நாளன்று, பிரதமர் நரேந்திர மோடியும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பும் இரு முறை சிரித்துப் பேசி நலம் விசாரித்துக் கொண்டனர். மாநாட்டின் நிறைவு நாளான வியாழக்கிழமை நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு, மோடியும் நவாஸýம் பரஸ்பரம் கைகுலுக்கியபடி பேசினர். அதேபோன்று, மாநாடு முடிவடைந்த பிறகு, நவாஸ் ஷெரீஃப்பின் தோளில் தனது கைகளை வைத்து மோடி பேசினார். அதைத் தொடர்ந்து, கைகளை குலுக்கிக் கொண்டு சிறிது நேரம் சிரித்துப் பேசியபடி, செய்தியாளர்களிடம் கலந்துரையாடினர். சார்க் மாநாட்டின் தொடக்க நாளான புதன்கிழமை நிகழ்ச்சியின்போது, மோடியும், ஷெரீஃபும் அருகருகே இருந்தும் முகம் கொடுத்துப் பார்த்துக் கொள்ளவில்லை. இதனால், தலைவர்கள் இடையே இறுக்கமான நிலை காணப்பட்டது. இந்நிலையானது, சார்க் மாநாட்டின் நிறைவு நாளன்று, பரஸ்பரம் இருவரும் சிரித்து பேசிக் கொண்டதால், முடிவுக்கு வந்தது.
இதுகுறித்து சுட்டுரை (டுவிட்டர்) சமூக வலைப்பக்கத்தில், வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன் வெளியிட்ட பதிவில், "இந்தப் புகைப்படத்துக்காகத்தான் அனைவரும் காத்திருந்தனர்' எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் அடுத்த சார்க் மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டபோது, பிரதமர் மோடி கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஆல மரம் நட்ட மோடி: இதனிடையே, விருந்து நிகழ்ச்சி நடைபெற்ற துலிகலில் உள்ள விடுதியில், ஆல மரக் கன்றை பிரதமர் நரேந்திர மோடி நட்டார். அதைத் தொடர்ந்து, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அந்த மரக் கன்றுக்கு தண்ணீர் ஊற்றினார்.