காவிரியின் குறுக்கே கர்நாடகத்தில் மேக்கேதாட்டு என்ற இடத்தில் 2 தடுப்பணைகள் கட்டும் அந்த மாநில அரசின் முடிவை கண்டித்து, தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் சனிக்கிழமை சாலை, ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதுதொடர்பாக மதிமுக பொதுச் செயலர் வைகோ உள்பட 3,148 பேர் கைது செய்யப்பட்டனர்.அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு அழைப்பு விடுத்த இந்தப் போராட்டத்துக்கு பல்வேறு கட்சியினர், வர்த்தக சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன. இதையொட்டி, மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன.தஞ்சாவூர்: தஞ்சாவூரில் நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் அ.நல்லதுரை தலைமையில் பல்வேறு கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், மதிமுக பொதுச் செயலர் வைகோ தலைமையில் வந்த தொண்டர்களும் போலீஸாரின் காவலை மீறி காலை 10.30 மணிக்கு ரயில் நிலையத்திற்குள் நுழைந்து திருச்சி- காரைக்கால் பயணிகள் ரயிலை மறித்தனர்.
இதையடுத்து, வைகோ, நல்லதுரை, அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் உள்பட 750 பேரை போலீஸார் கைது செய்தனர்.இதேபோல், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலை, ரயில் மறியலில் ஈடுபட்ட 665 பேரை போலீஸார் கைது செய்தனர். மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.திருவாரூர்: திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, கூத்தாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மன்னார்குடியில் மயிலாடுதுறை செல்லும் பயணிகள் ரயிலை மறித்த அனைத்து விவசாயிகள் சங்க நிர்வாகி ப.ஞானசேகரன் உள்ளிட்ட 50 பேர் கைது செய்யப்பட்டனர். இதுதவிர 3 இடங்களில் ஆர்ப்பாட்டம், 35 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது. ரயில் மறியலில் ஈடுபட்டதாக 192 பேரும், சாலை மறியலில் ஈடுபட்டதாக 1,187 பேர் என மொத்தம் 1,379 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகை: நாகை மாவட்டத்தில் ரயில் மறியல் செய்த 225 பேர், சாலை மறியலில் ஈடுபட்ட 129 பேர் என மொத்தம் 354 பேர் கைது செய்யப்பட்டனர். மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வர்த்தக நிறுவனங்கள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன.நாகை புதிய பேருந்து நிலையத்தில் மறியலில் ஈடுபட்ட காவிரி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் சேரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.கீழ்வேளூரில், திருச்சி- காரைக்கால் பயணிகள் ரயிலை மறிக்க முயற்சித்த காவிரி பாசன விவசாயிகள் சங்க பொதுச் செயலர் தனபாலன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.மயிலாடுதுறையில் ரயில் மறியலுக்குச் சென்ற விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் ஆறுபாதி கல்யாணம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வணிகர் சங்கப் பேரவை நாகை மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் த. வெள்ளையன் பங்கேற்றார்.