தனது சொந்தத் தொகுதியான வாராணசியில் கங்கையைத் தூய்மைப்படுத்தும் பணியை சனிக்கிழமை தொடங்கிவைத்த பிரதமர் நரேந்திர மோடி, அதன் விழிப்புணர்வுப் பிரசாரத்துக்கு 9 பேர் கொண்ட குழுவையும் அமைத்தார். மோடி பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு தனது சொந்தத் தொகுதியான வாராணசிக்கு முதன்முறையாக 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் வாராணசியின் அஸ்ஸி காட் பகுதியில் கங்கை நதியில் கிடந்த வண்டல் மண்ணை மண்வெட்டியால் அகற்றி தூய்மைப்படுத்தும் பணியைத் தொடங்கிவைத்தார். சுமார் 15 நிமிடங்கள் வரை கங்கையை தூய்மைப்படுத்தும் பணியில் அவர் ஈடுபட்டார். பின்னர் கங்கையை தூய்மைப்படுத்தும் தனது திட்டம் குறித்து மோடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: கங்கை நதியில் மண்டிக்கிடக்கும் குப்பையை அகற்றும் பணியை விரைவுபடுத்த நான் இங்கு வந்துள்ளேன். இங்குள்ள சமூக சேவை அமைப்புகள் ஒரே மாதத்தில் வாராணசியில் ஓடும் கங்கை நதியில் உள்ள குப்பைகளை அகற்றி விடும் என்று உறுதி அளிக்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.
பின்னர் அவர் கங்கை நதியை தூய்மைப்படுத்தும் பணியின் விழிப்புணர்வு பிரசாரத்துக்கு 9 பேர் குழுவை அறிவித்தார். அக்குழுவில், உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், பாஜக எம்.பி.யும், போஜ்புரி பாடகருமான மனோஜ் திவாரி, சூஃபி பாடகர் கைலாஷ் கெர், நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவாஸ்தவா, கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, முகமது கைப், சித்ரகூடத்தில் உள்ள பார்வையிழந்தோருக்கான பல்கலைக்கழக நிறுவனரும், துணை வேந்தருமான சுவாமி ராம்பத்ராசார்யா, சம்ஸ்கிருத அறிஞர் தேவிபிரசாத் துவிவேதி, எழுத்தாளர் மனு சர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பின்னர் மோடி கங்கை நதியில் சிறப்பு பூஜை செய்தார். இதையடுத்து, அவர் அங்குள்ள ஆன்மிகத் தலைவர்
ஸ்ரீஆனந்தமயி மாவின் ஆசிரமத்துக்குச் சென்று, அங்குள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அந்த ஆசிரமம் சார்பில் நடத்தப்பட்டு வரும் மருத்துவமனையையும் மோடி பார்வையிட்டார். அதன் பிறகு அவர் தில்லி புறப்பட்டுச் சென்றார். முன்னதாக, வெள்ளிக்கிழமை இரவு வாராணசியில் உள்ள அறிஞர்களுடனான விருந்தில் பிரதமர் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது: லண்டன் நகரம் போன்று வாராணசி நகரம் பாரம்பரியம் மிகுந்த, நவீன நகரமாக விரைவில் மாறும். பூகம்பத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட குஜராத்தின் புஜ் நகரை நான் அந்த மாநில முதல்வராக இருந்த காலகட்டத்தில் தலைசிறந்த நகரமாக மாற்றினேன். அதேபோல் வாராணசியும் மாறும். பேட்டரியால் இயங்கும் கார்கள் இங்கு இயக்கப்படும். வீடுதோறும் சென்று குப்பை சேகரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். தில்லியில் இருந்து வாராணசிக்கு, அயோத்தி, அலாகாபாத் வழியாக சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் "பேலஸ் ஆன் வீல்ஸ்' ரக சொகுசு ரயில்கள் இயக்கப்படும் என்று மோடி தெரிவித்தார்.