ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்துள்ள அரசமைப்பு சட்டத்தின் 370ஆவது பிரிவு விவகாரத்தில், அந்த மாநில மக்கள் விருப்பப்படி செயல்படுவோம் என்று பாஜக தெரிவித்துள்ளது. ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை பேசிய ஜம்மு-காஷ்மீர் மாநில பாஜக பொறுப்பாளர் அவிநாஷ் ராய் கன்னாவிடம், 370ஆவது பிரிவை பாஜக நீக்கத் திட்டமிட்டுள்ளதா? என கேள்வியெழுப்பப்பட்டது.
அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு: இந்த விவகாரத்தில், ஜம்மு-காஷ்மீர் மக்களின் விருப்பம் எதுவோ, அதையே பாஜக செய்யும். பிரதமர் நரேந்திர மோடியை காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சஜ்ஜத் லோனே அண்மையில் சந்தித்ததை சுட்டிக்காட்டி, பாஜக கூட்டணியில் அவரை சேர்க்கும் முயற்சி நடைபெறுவதாக தேசிய மாநாடு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். அதுபோன்ற சிந்தனை கொண்டவர்களின் மனதில் மாற்றம் ஏற்பட்டால், பாஜக மகிழ்ச்சியடையும் என்றார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்துள்ள அரசமைப்பு சட்டத்தின் 370-ஆவது பிரிவை நீக்குவதற்கு பாஜக திட்டமிட்டுள்ளதாக ஃபரூக் அப்துல்லா அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.