BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Sunday 16 November 2014

கருப்புப் பணம் மீட்பு விவகாரம் : மோடியின் நிலைப்பாட்டுக்கு ஜி-20 நாடுகள் ஆதரவு

கருப்புப் பணத்தை மீட்கும் விவகாரத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் நிலைப்பாட்டுக்கு ஜி-20 அமைப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மோடியின் கருத்தை ஏற்று, ஜி-20 நாடுகளின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையிலும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதுதொடர்பாக ஆஸ்திரேலிய நாட்டின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் மாநாட்டில் மோடி ஞாயிற்றுக்கிழமை பேசியதாவது: வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணத்தை மீட்கும் நடவடிக்கையில் இந்தியா ஈடுபட்டுள்ளது. இந்தியர்களின் கருப்புப் பணம் குறித்த தகவல்களை இந்தியாவுக்கு அளிக்க வேண்டும் என ஜி-20 நாடுகளை கேட்டுக் கொள்கிறேன். கருப்புப் பணத்தால் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு தீர்வு காண்பதற்கு, ஜி-20 அமைப்பில் இடம்பெற்றுள்ள அனைத்து நாடுகளும் தங்களுக்கு இடையே ஒத்துழைப்பை அதிகரித்துக் கொள்ள வேண்டும். வரி குறித்த தகவல்களைத் தானாக முன்வந்து பரிமாறிக் கொள்வது தொடர்பான உலகளாவிய புதிய திட்டத்தை இந்தியா ஆதரிக்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம், வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கணக்கில் வராத பணம் குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிவதுடன், அந்தப் பணத்தை மீட்டு அவரவர் நாட்டுக்கு திருப்பிக் கொண்டுவர முடியும். ஜி-20 நாடுகள் தங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை அதிகரிப்பதன் மூலம், கருப்புப் பணத்தால் எழுந்துள்ள சவால்களுக்கு மட்டுமன்றி, பயங்கரவாதம், போதை மருந்துக் கடத்தல், ஆயுதக் கடத்தல், இணையவழிக் குற்றங்களைத் தடுத்தல் ஆகிய பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களுக்கும் தீர்வு காண முடியும் என்றார் மோடி.

ஜி-20 மாநாட்டின் முடிவில் வெளியிடப்பட்ட 3 பக்க கூட்டறிக்கையில், கருப்புப் பணத்தை மீட்கும் விவகாரத்தில் மோடியின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து பிரதமர் மோடியுடன் ஆஸ்திரேலியா சென்றுள்ள ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன் ஆகியோர் தெரிவித்ததாவது: ஜி-20 நாடுகள் சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், வெளிப்படையான வரி விதிப்பு, வரி தொடர்பான தகவல்களை வெளியிடுவது ஆகிய அம்சங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடியின் வலியுறுத்தலை அடுத்து, பிரேசில், தென்னாப்பிரிக்க அரசுகளும், வெளிப்படைத்தன்மை என்ற வார்த்தையை அறிக்கையில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தின. அதைத் தொடர்ந்து, கூட்டறிக்கையில் வெளிப்படைத்தன்மை என்ற வார்த்தை சேர்க்கப்பட்டது என்று தெரிவித்தனர். இதேபோல், உணவு தானிய சேமிப்பு விவகாரத்தில், இந்தியா-அமெரிக்கா இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதற்கும் ஜி-20 நாடுகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

மோடி புதிய யோசனை: ஜி-20 மாநாட்டைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணப் பிரதமர் கேம்பெல் நியூமென் ஞாயிற்றுக்கிழமை விருந்தளித்தார். இந்த நிகழ்ச்சியில், மோடி பேசியதாவது: நாடுகளுக்கு இடையேயான உறவில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்றால், அந்த நாடுகளின் மாநிலங்கள், பிற நாடுகளிலுள்ள மாகாணங்களோடும், நகரங்கள், பிற நாடுகளிலுள்ள நகரங்களோடும் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதை இந்தியா வரவேற்கிறது. அதற்கு நானும் எனது ஆதரவை அளித்து வருகிறேன். நவீன தொழில்நுட்பத்தின் மையமாக பிரிஸ்பேன் நகரம் உருவெடுத்துள்ளது. இதேபோல், சைபராபாத் (தகவல் தொழில்நுட்ப நகரம்) என ஹைதராபாத் நகரம் அழைக்கப்படுகிறது. இயற்கையாகவே அந்த இரு நகரங்களுக்கும் இடையே சகோதரத்துவ தொடர்பு உள்ளது.

இந்தியா-ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையேயான உறவானது, சிறப்பு வாய்ந்தது ஆகும். குறிப்பாக, ஆஸ்திரேலியாவுடனான இந்தியாவின் உறவில், குயின்ஸ்லாந்து மாகாணம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தியா, குயின்ஸ்லாந்து மாகாணத்துக்கு இடையே தொழில்நுட்பம், ஆராய்ச்சித் துறைகளில் ஒத்துழைப்பு நிலவுகிறது. குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த ஏராளமான வர்த்தகப் பிரமுகர்கள், இந்தியாவுக்கு இந்த ஆண்டு வருகை புரிந்தனர். இந்தியாவின் வளர்ச்சிக்கு தேவையான ஆதாரங்களை அளிக்கும் முக்கிய மையமாக குயின்ஸ்லாந்து உருவெடுத்துள்ளது. இந்தியர்கள் முதலீடு செய்வதற்கு சிறந்த இடமாகவும் குயின்ஸ்லாந்து திகழ்கிறது. கல்வி, திறன்கள் ஆகிய துறைகளில் இந்தியாவுக்கு இந்த மாகாணம் ஆதரவு அளிக்கிறது. இந்தியாவுடன் குயின்ஸ்லாந்து மாகாண ஆராய்ச்சிப் பல்கலைக்கழகங்கள் இணைந்து செயல்பட்டு வருகின்றன என்றார் மோடி.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies