முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 140 அடியாக உயர்ந்தது. இதையடுத்து, கேரள தலைமைச் செயலருக்கும், இடுக்கி மாவட்ட ஆட்சியருக்கும் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை குறித்த தகவலை தமிழக பொதுப் பணித் துறை அதிகாரிகள் அனுப்பி உள்ளனர். முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்க உச்ச நீதிமன்றம் கடந்த மே 7-இல் உத்தரவிட்டது. அந்தத் தீர்ப்பின்படி அணையில் 142 அடி தண்ணீரைத் தேக்கும் வகையில், கடந்த ஜூலை 17-இல், பெரியாறு அணையை மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் நாதன் தலைமையில் பார்வையிட்ட மூவர் கண்காணிப்புக் குழுவினர், அணையின் 13 கதவணைகளை இறக்கினர். இந்த நிலையில், கடந்த 2 மாதங்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தென்மேற்குப் பருவ மழையாலும், தற்போது பெய்து வரும் வடகிழக்குப் பருவ மழையாலும் அணையின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும், அணையிலிருந்து கடந்த வாரம் அதிக அளவு தண்ணீர் வெளியேறுவதை நிறுத்தி 142 அடி தண்ணீரைத் தேக்கி உச்ச நீதிமன்றத் தீர்ப்பை உறுதிப்படுத்த வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தினர். அணையிலிருந்து தமிழகத்துக்கு நீர் வெளியேற்றும் அளவு குறைக்கப்பட்டதால், அணையின் நீர்மட்டம் வேகமாக உயரத் தொடங்கியது. வெள்ளிக்கிழமை காலை அணையின் நீர்மட்டம் 140 அடியானது.
இதையடுத்து, தமிழக பொதுப் பணித் துறை அதிகாரிகள், தேனி மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி உள்ளிட்டோர் கேரள தலைமைச் செயலர், கேரள நீர்ப்பாசனத் துறையினர், இடுக்கி மாவட்ட ஆட்சியர் அஜித்குமார் பாட்டீல் பகவத்ராவ் ஆகியோருக்கு முறையாக தகவல் அனுப்பினர். அத்துடன், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து இடுக்கி அணை வரை வசிப்பவர்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுவது குறித்த தகவலையும் அனுப்பினர்.
வெள்ளிக்கிழமை மாலை நிலவரம்: 152 அடியுள்ள பெரியாறு அணையின் நீர்மட்டம் 140.30 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 1,916 கன அடியிலிருந்து 2,500 கன அடியாக உயர்ந்துள்ளது. மேலும், அணையிலிருந்து காலை வரை நொடிக்கு 456 கன அடி தண்ணீர் மட்டுமே தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டது. இந்த நிலையில், மாலையில் தண்ணீர் திறப்பு 900 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையில் மொத்த நீர் இருப்பு 7,126 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது. மத்திய நீர்வள ஆணையத்தின் உத்தரவின் பேரில், 1979-ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணையில் மராமத்துப் பணிகள் தொடங்கிய பிறகே, கடந்த 35 ஆண்டுகளில் 12 முறை பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடி வரை உயர்ந்துள்ளது.
கடந்த 13.11.1979 அன்று அணையின் நீர்மட்டம் 143.70 அடியாக உயர்ந்தது. தற்போது 36 ஆண்டுகளுக்குப் பிறகு அணையின் நீர்மட்டம் 140 அடியை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து இருக்கும் பட்சத்தில் இன்னும் ஓரிரு நாள்களில் தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்களின் எதிர்பார்ப்பான 142 அடியை எட்டிவிடும் எனத் தெரிகிறது.