அக்காலத் தமிழர்கள் உணவு என்பதனைக் குறிக்க உணா, உணவு, வல்சி, உண்டி, ஓதனம், அசனம், பகதம், இசை, ஆசாரம், உறை, ஊட்டம், புகா, மிசை போன்ற பல சொற்களைப் பயன்படுத்தியுள்ளனர். தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் 623ஆவது நூற்பா, “எண்வகை உணவு“ பற்றிக் குறித்துள்ளது. அவை எவை என்பது பற்றித் தொல்காப்பியர் விளக்கவில்லை. ஆனால், உரையாசிரியர்கள் விளக்கியுள்ளனர். ஆனால் அவ்விளக்கம் ஏற்புடையதாக இல்லை. தமிழர் உணவுகள் எட்டுவகை என்றால், அவை சமைக்கப்படும் முறையிலா அல்லது உண்ணப்படும் முறையிலா என்ற வினா எழுகின்றது. சங்க இலக்கிய அடிகள், தமிழர்கள் உணவுவகை எண்பதுக்கும் மேற்பட்டது என்று காட்டுகின்றன.
சைவ உணவு (மரக்கறி)
ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வில்தொல்தமிழர்கள் அரிசியைப் பயன்படுத்தியதற்கான வலுவான சான்றுகள் கிடைத்துள்ளன. நெல்லிலிருந்து அவர்கள் அரிசியைக் கைக்குற்றல் - கைக்குத்தல் (உலக்கை கொண்டு இடித்தல்) முறையில் இடித்துப் பிரித்துப் பயன்படுத்திய செய்தியினைப் புறநானூற்றின் 399ஆம் பாடல் தெரிவித்துள்ளது. பெரும்பாணாற்றுப்படையின் 98ஆவது அடியிலும் சிறுபாணாற்றுப்படையின் 193ஆவது அடியிலும் இச்செய்தியினைக் காணமுடிகின்றது. அகநானூற்றின் 37ஆவது பாடலில் காணப்பயிறுடன் (கொள்) பாலினைக் கலந்து வைத்த கஞ்சி பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. மலைபடுகடாமின் 434 ஆவது அடியில் அவரை விதையை அரிசியுடன் கலந்து செய்த கஞ்சி பற்றிய செய்தி காணப்படுகின்றது. பட்டினப்பாலையின் 44, 45ஆவது அடிகளில் சோறுவடித்த கஞ்சி ஆறுபோல ஓடியதாகக் குறிப்புள்ளது. பழந்தமிழர்கள் சோறு என்பதற்கு அடிசில், அழினி, கூழ், அவிழ், கொன்றி, நிமிரல், புழுங்கல், பொம்மன், மிதவை எனப் பல்வேறு சொற்களைப் பயன்படுத்தியுள்ளனர். பச்சரிசியால் உருவாக்கப்பட் சோறினைப் “பொங்கல்“ என்றும் வேகவைத்த அரிசியால் உருவாக்கப்பட்ட சோற்றினைப் “புழுங்கல்“ என்றும் அழைத்தனர். சோறினைச் சிறுசோறு, பெருஞ்சோறு என்றும் வகைப்படுத்தியிருந்தனர். மேலும், சோறில் கலக்கும் அல்லது சோறின் தன்மைக்கு ஏற்ப அதனை ஊன்சோறு, கொழுஞ்சோறு, செஞ்சோறு, நெய்ச்சோறு, புளிச்சோறு, உளுந்தஞ்சோறு, பாற்சோறு, வெண்சோறு எனப் பலவகைப்படுத்தியிருந்தனர்.
உழவர்கள் வரகரிசிச்சோற்றுடன் புழுக்கிய அவரைப் பருப்பினைக் கலந்து உண்ட செய்தியினைப் பெரும்பாணாற்றுப்படையின் 195ஆம் அடி குறிப்பிட்டுள்ளது.
அகநானூற்றின் 250ஆவது பாடல் மற்றும் நற்றிணையின் 344ஆவது பாடலின் வழியாக அக்காலத் தமிழர்கள் தானியங்களை வெயிலில் காய வைத்தபின் சமைத்த செய்தியினை அறியமுடிகின்றது.