இலங்கை அதிபர் ராஜபக்சேவின் தொழில் முறை
பார்ட்னரான லைகா மொபைலின் அதிபர் சுபாஷ்கரன்தான் இளைய தளபதி விஜய்
நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் ‘கத்தி’
படத்தின் உண்மையான தயாரிப்பாளர் என்று பல முறை ஊடகங்களில்
எழுதியாகிவிட்டது.
இந்த உண்மை வெளியில் தெரிந்துவிடக்கூடாது
என்பதற்காக ‘கத்தி’ பட டீம் எத்தனையோ முயற்சிகள் செய்தும், லண்டனில்
இருந்து செய்திகள் வெளியாகிவிட்டது..
இப்போது தமிழ்நாட்டில் இருக்கும்
ராஜபக்சேயின் எதிர்ப்பாளர்களிடமிருந்து ‘கத்தி’ படத்தைக் காப்பாற்றி
தியேட்டருக்கு கொண்டு செல்லும் பொறுப்பை, பொறுப்பாக செய்து வருகிறார்
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.
சீமான், திருமாவளவன், நெடுமாறன்
போன்றவர்களை நேரில் சந்தித்து இது குறித்து விளக்கம் கொடுத்ததாக முருகதாஸ்
தெரிவித்திருந்தார். இதில் சீமான், நெடுமாறனின் நிலை என்ன என்பது
இப்போதுவரையிலும் தெரியவில்லை.
ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் சார்பில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னியரசு இது பற்றி பேட்டியளித்திருக்கிறார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், ”முருகதாஸ்,
தலைவர் திருமாவளவனை சந்தித்து இது குறித்து பேசியது உண்மை. ஆனால் எங்களது
முடிவை நாங்கள் இன்னும் கூறவில்லை. இலங்கை இனப் படுகொலைக்கு உடந்தையாக
இருந்தவர்களின் பணத்தில் ‘கத்தி’ திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தால் அதை
வன்மையாக கண்டிக்கிறோம். அப்படத்தை தமிழகத்தில் திரையிடக் கூடாது. இனப்
படுகொலைக்கு உடந்தையாக இருந்தவர்களின் பணத்தில் தயாரிக்கப்பட்ட படம்
என்றால் இயக்குனரும், தயாரிப்பாளரும் பதில் சொல்லியே ஆக வேண்டும்..” என்று
கூறியிருக்கிறார்.
இப்போதும் வன்னியரசு சொல்லியிருப்பதுகூட
இந்தப் பிரச்சினையில் உண்மை நிலை தங்களுக்குத் தெரியாது என்ற தொனியிலேயே
இருக்கிறது.. “எடுக்கப்பட்டிருந்தால்” என்கிற வார்த்தையே சந்தேகத்தைக்
கிளப்புகிறது.. விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு நம்பும் அளவுக்கு ஆதாரங்களை
யார் கொடுப்பது..? முருகதாஸ் ஏற்கெனவே சொல்லிவிட்டுப் போயிருக்கும்
எதிர்மறை ஆதாரங்களே இந்தப் பிரச்சினையை நீர்த்துப் போகச் செய்துவிடுமோ என்ற
அச்சம் இப்போது எழுந்துள்ளது.
இன்னும் வைகோ மட்டும்தான் பாக்கியாம்.
அவரைத்தான் முருகதாஸ் இன்னமும் சந்திக்கவில்லை என்கிறார்கள். அவரையும்
பார்த்து கூலாக்கிவிட்டால், வெகுவிரைவில் வெள்ளித்திரையில் லைகா மொபைல்ஸின்
‘கத்தி’யை காணலாம்..!