ஜிகர்தண்டா, வேலையில்லா பட்டதாரி புகைப்பிடிப்பதை ஊக்குவிக்கிறது, திரைத்துறையினர் சமூகப் பொறுப்புடன் செயல்படவேண்டும் - பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை.
வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷ் புகைப்பிடிப்பது போன்ற போஸ்டர் வெளியான போது பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர், அதையடுத்து புகைப்பிடிப்பது போன்ற அந்த போஸ்டர் விளம்பரங்களில் பயன்படுத்தப்படவில்லை, தற்போது வெளியாகியுள்ள ஜிகர்தண்டா திரைப்படமும் புகைப்பிடித்தலை ஊக்குவிக்கின்றது என்று கடுமையாக விமர்சித்துள்ளார் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ்
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மருத்துவர் இராமதாசின் அறிக்கையின் ஒரு பகுதி இங்கே
"உலகின் தலைசிறந்த அறிவாயுதங்களில் ஊடகமும் ஒன்றாகும். ஊடகக் குடும்பத்தின் வலிமையான உறுப்பினரான திரைப்படங்கள் ஏற்படுத்தும் சமூக சீரழிவுகள் அண்மைக்காலமாக அதிகரித்துவிட்டன. இளைஞர்களை தவறான வழிக்கு திருப்புவதில் திரைப்படங்கள் தான் முக்கியப் பங்காங்காற்றுகின்றன.
தமிழ் திரைப்படங்களில் அண்மைக்காலமாக வன்முறைக் காட்சிகளும், புகை பிடிக்கும் மற்றும் மது அருந்தும் காட்சிகளும் அதிகரித்து விட்டன. தற்போது ஓடிக்கொண்டிருக்கும் ‘வேலையில்லாப் பட்டதாரி’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருப்பவர் அடிக்கடி புகைப்பிடிப்பது போன்றும், மது அருந்தி விட்டு நடனமாடுவது போலவும் காட்சிகள் அமைந்திருக்கின்றன.
ஜிகர்தண்டா என்ற திரைப்படமும் மது மற்றும் புகையை போற்றும் வகையில் தான் உள்ளது. பொதுவாகவே இப்போது வெளியாகும் பெரும்பாலான படங்களில் நாயகன், நாயகி இருவரும் இணைந்து மது அருந்துவதைப் போலவும், செயற்கரிய செயல்களை செய்துவிட்டால் அதைக் கொண்டாட ஒரேவழி மதுவும், புகையும் பிடித்தபடியே நடனமாடுவது தான் என்பது போன்றும் காட்சிகள் வைக்கப்படுகின்றன. காட்சிக்கு தேவையே இல்லாவிட்டாலும் கூட 90 % திரைப்படங்களில் இத்தகைய காட்சிகள் இடம் பெறுகின்றன.
மருத்துவர் அன்புமணி இராமதாசுவின் அறிவுரையை ஏற்று ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட நடிகர்கள் இளைஞர்களை சீரழிக்கும் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டோம் என வாக்குறுதி அளித்தனர். ஆனால், இன்னும் சில நடிகர்கள் இத்தகைய காட்சிகளில் நடிப்பதும், எச்சரிக்கை வாசகத்தை காட்டி விட்டால் எத்தனை முறை வேண்டுமானாலும் இத்தகைய காட்சிகளை காட்டலாம் என சமூக பொறுப்பின்றி செயல்படுவதும் தொடர்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் புகைப்பிடிப்பதால் 10 லட்சம் பேரும், மது அருந்துவதால் 18 லட்சம் பேரும் உயிரிழக்கிறார்கள்.புகைப்பிடிக்கும் இளைஞர்களில் 52.2% பேர் திரைப்படங்களில் தங்களுக்கு பிடித்த நடிகர் புகைக்கும் காட்சிகளைப் பார்த்து தான் புகைப்பழக்கத்திற்கு ஆளானதாக லான்செட் மருத்துவ இதழ் வெளியிட்ட ஆய்வுக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் உணராமல் தங்களின் வருமானத்திற்காக மது மற்றும் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடித்து இளைஞர் சமுதாயத்தை திரைத்துறையினர் தொடர்ந்து சீரழித்து வருவதை இனியும் வேடிக்கைப் பார்க்க முடியாது.