பிரபல ஆங்கிலப்பத்திரிக்கை ஒன்றில் இளையராஜாவின் மகனும் பிரபல இசையமைப்பாளருமான யுவன்சங்கர் ராஜாவின் பேட்டி வெளியாகியுள்ளது, அதில் இஸ்லாத்துக்கு ஏன் மாறினீர்கள் என்று கேட்டதற்கு நீண்ட விளக்கம் அளித்திருந்தார்ம் அதில் கூறியிருந்ததாவது.
என் தந்தையும் தாயும் தீவிர கடவுள் பக்தியாளர்கள், வீட்டில் கண்ணாடி விழுந்து உடைந்தால் கூட வேதியர்களை அழைப்பார் என் தந்தை, ஆனால் எனக்கு சிறு வயதிலிருந்தே ஒரு எண்ணம் உண்டு, அகில உலகத்தையும் அனைத்தையும் ஆட்டுவிக்கும் எல்லாவற்றுக்கும் மேலான கடவுள் எப்படி ஒரு உருவத்தை கொண்டிருப்பார் என்று யோசிப்பேன்.
மும்பையிலிருந்து சென்னை திரும்பிய போது என் தாய்க்கு உடல்நிலை சரியில்லாமல் அதிகமாக இரும ஆரம்பித்தார், அவரை நானும் என் தங்கையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம், மருத்துவமனையில் படுத்திருந்த நிலையில் என் கையை பிடித்துக்கொண்டிருந்த தாய் உயிர் துறந்தார், சில நொடிகளுக்கு முன் உயிருடன் இருந்தவர் இப்போது இல்லை, அவரது ஆத்மா எங்கே போயிருக்கும் என்று நினைத்தேன்.
அதற்கான பதிலை தேடும் போது அல்லாவிடம் இருந்து அழைப்பு வந்தது, எனது நெருங்கிய நண்பர் ஒருவர் தொழுகை செய்யும் விரிப்பை கொடுத்தார், அவர் புனிதமான மெக்காவிற்கு சென்றிருந்த போது கொண்டு வந்தது என்றும் இது மெக்காவை தொட்ட தொழுகை பாய் என்றும் சொன்னார், எப்போதெல்லாம் கடினமாக உணர்கிறாயோ அப்போது இதன் மேல் அமர்ந்து கொள் என்றார்.
அதை சுருட்டி ஒரு மூலையில் வைத்துவிட்டேன், அதன் பின் சில மாதங்கள் கழித்து என் தாய் பற்றி உறவினருடன் பேசிவிட்டு அழுது கொண்டே அறைக்கு வந்த போது அந்த தொழுகை விரிப்பை பார்த்தேன், அது வரை அது அங்கிருந்ததையே மறந்திருந்த நான் அதை விரித்து அதன் மேல் அமர்ந்து கடவுளே என் பாவங்களை மன்னித்தருளவும் என்றேன், என் மனபாரம் குறைந்து லேசானதை போல உணர்ந்தேன், அதன் பின் குரானையும் மொழிபெயர்ப்புகளையும் படிக்க ஆரம்பித்தேன், இஸ்லாத்தை பின்பற்ற ஆரம்பித்தேன் 2014 ஜனவரி மாதத்தில் தொழுகை செய்வதையும் கற்றுக்கொண்டேன்.
எனது தந்தையிடம் கடைசியாகத்தான் தான் இஸ்லாத்துக்கு மாறப்போவதாக கூறினேன், அவர் அதை விரும்பவில்லை என்றார். தற்போது தான் யுவன்சங்கர் ராஜா என்ற பெயரில் பிரபலமாகியிருப்பதால் உடனடியாக பாஸ்போர்ட் உட்பட ஆவணங்களில் பெயர் மாற்றப்போவதில்லை என்றும் பின்பு அதை மாற்றலாம் என்றும் அதில் கூறினார்
Yuvan shankar raja explained in the interview with famous english daily that why he converted to islam.