பொங்கல் பண்டிகை வெளியீடாக `வணங்கான்' திரைப்படம் ஜனவரி 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
பாலா இயக்கத்தில் உருவாகியிருக்கிற இத்திரைப்படத்தில் அருண் விஜய் நடித்திருக்கிறார். இயக்குநர் பாலா சினிமாவில் தடம் பதித்து 25 ஆண்டுகள் கடந்துவிட்டது. அவரைக் கொண்டாட பெருவிழாவை ஏற்பாடு செய்திருந்தார் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. `வணங்கான்' பட ரிலீஸுக்கு வாழ்த்துகளைக் கூறி அவரிடம் பேசினோம்.
`வணங்கான்' திரைப்படம் முடிஞ்சு திரையரங்கத்துல இருந்து வெளில வரும்போது எங்க மனநிலை எப்படி இருக்கும்?
ரொம்ப இறுக்கமாக இருக்கும். மனசு பாரமாக இருக்கிற மாதிரியான உணர்வைத் திரைப்படம் கொடுக்கும். பாலா அண்ணன் முதல்ல கூப்பிட்டு `இந்த மாதிரி ஒரு புராஜெக்ட் இருக்கு, பண்ணுங்க'னு சொல்லிக் கொடுத்தார். அப்படிதான் வி ஹவுஸ் புரொடக்ஷனுக்கு வணங்கான் திரைப்படம் வந்தது.
ஏற்கெனவே ஒரு தயாரிப்பு நிறுவனம் தயாரிச்சு பரஸ்பர புரிதலுக்குப் பிறகு அந்தப் படத்துல விலகியிருந்தாலும் சினிமா வட்டாரத்துல சில பேச்சுகள் எழுந்திருக்கும்! உங்க மனநிலையும், அருண் விஜய்யோட மனநிலையும் இந்தப் படத்துக்குள்ள வரும்போது எப்படி இருந்தது ?
நான் என்னை மட்டும்தான் நம்புவேன். நான் சரியாக இருந்தால் எல்லாம் சரியாக நடக்கும்னு நம்புவேன். அதே மனநிலைதான் மாநாடு திரைப்பட சமயத்துலயும் இருந்துச்சு. நான் பண்ற படங்களுக்கு எப்போதும் சர்ச்சைகள் வரும். நாலு பேர் அழைச்சு இந்தப் படத்தை பண்ணாதீங்கன்னு சொல்வாங்க. அதெல்லாம் எடுத்துக்கமாட்டேன். நம்ம சரியாக இருந்தால் எல்லாம் சரியாக நடக்கும். பாலா சார் இயக்கத்துல நடிக்கணும்னு அருண் விஜய்-க்கும் ரொம்ப நாள் கனவு. அது நடந்ததுனால அவருக்கு சந்தோஷம்தான். அதன் பிறகு சூர்யா சார்கிட்ட சொல்லிட்டுதான் அருண் விஜய் நடிக்க வந்தார். சூர்யா சாரும் `நல்லபடியாக படத்தை பண்ணுங்க'னு சொல்லியிருக்கார்.
இயக்குநர் பாலா மறுத்ததுக்குப் பிறகும் இந்த விழாவை நடத்தணும்னு நீங்க பிடிவாதமாக இருந்ததாகக் கேள்விப்பட்டோம். இந்தளவுக்கு அவர் மீது மரியாதை வச்சிருக்கிறதுக்கு என்ன காரணம்?
பாலா சார் ஒரு நல்ல படைப்பாளி. சமரசமில்லாத படைப்பாளி அவர். அவர் நினைச்ச விஷயங்கள் நடக்குறதுக்காக எந்த விஷயங்களையும் அவர் இழக்குறதுக்கு தயாராக இருப்பார். அந்தப் பிடிவாதம் எனக்கு பாலா சார்கிட்ட பிடிச்சிருந்தது. மனிதராக அவரைப் பற்றி நிறைய விஷயங்கள் புரிஞ்சிருக்கேன்னு நான் பொய் சொல்ல விரும்பல. ஒரு படைப்பாளியாக அவரை தூரத்துல இருந்து ரசிச்சிருக்கேன். நல்ல படைப்பாளியை வாழ்த்துறதுக்கு யோசிக்கவேமாட்டேன். அவங்க எதிரியாக இருந்தால்கூட வாழ்த்துவேன். அப்படி டிசம்பர் மாதம் பாலா அண்ணன் சினிமாவுல 25 ஆண்டுகள் நிறைவு செய்ததைக் கொண்டாடணும்னு நினைச்சேன். நல்ல படைப்பாளியைக் கொண்டாடுறதுக்கு இந்த விழா ஒரு முன் உதாரணமாக இருக்கும். படைப்பாளி எப்போதும் பாராட்டுக்குதான் ஆசைப்படுவாங்க. அப்படி சினிமாவில் இருப்பவர்கள் பாலா அண்ணனைப் பற்றி என்ன நினைக்கிறாங்கங்கிற விஷயத்தின் வெளிப்பாடுதான் இந்த நிகழ்வு.
விழாவுக்கு யாரையெல்லாம் அழைச்சிருந்தீங்க?
சூர்யா சார் விருப்பப்பட்டு நிகழ்வு வந்தாரு. பாலா அண்ணன் சூர்யா சார் மேல அன்பு வச்சிருக்கார். அவர் பேசும்போது சூர்யா சார் மேல வச்சிருக்கிற அன்பு தெரிய வந்தது. அவங்களுக்கு இடையில என்ன முரண் இருக்குனு நான் தெரிஞ்சுக்க விரும்பல. சூர்யா சார் எந்த இடத்துலயும் காயப்பட்டுவிடக்கூடாதுன்னு தெளிவாக பாலா அண்ணன் இருந்தார். பாலா அண்ணன்கூட பயணிச்ச எல்லோரையும் அழைச்சிருந்தோம். விஷாலை ரீச் பண்ணவே முடியவே இல்லை. மெசேஜ் பண்ணினோம், அவருடைய மேனேஜரையும் தொடர்பு கொண்டோம். யாரையும் ரீச் பண்ணவே முடியல. அதர்வாவும் படப்பிடிப்புல இருக்கிறதாகச் சொன்னாரு.
சாம் சி.எஸ் இந்த களத்திற்கு எந்தளவுக்கு பொருந்தியிருக்காரு?
முதல்ல ஜி.வி.பிரகாஷ்தான் பின்னணி இசையையும் அமைக்கிறதாக இருந்தது. ஆனால், அதற்கு அவர் ரெண்டு மாசம் டைம் கேட்டாரு. ஆனால், டைம் இல்ல. அப்போதான் சாம்.சி.எஸ் படத்துக்குள்ள இருந்தார். அவருக்கு பெயர்சொல்ற படமாக `வணங்கான்' இருக்கும். அவர் பின்னணி இசையமைச்ச படங்கள்ல இந்தப் படம் முக்கியமானதாக இருக்கும்.
`ஏழு கடல் ஏழு மலை' எப்போ எதிர்பார்க்கலாம்? ரோட்டர்டேம் திரைப்பட விழாவுல எப்படியான வரவேற்பு கிடைச்சது?
படம் நல்லா வந்திருக்கு. பிப்ரவரியில படத்தை வெளியிட ப்ளான் பண்றோம். ரோட்டர்டேம்ல எல்லோரும் என்ஜாய் பண்ணி படத்தைப் பார்த்தாங்க. ரிலீஸுக்கு முன்னாடியே இப்படியான வரவேற்பு எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. நம்ம ஆங்கிலப் படத்தை பார்த்து வியந்து போகிற மாதிரி, அவங்க நம்ம படத்தைப் பார்த்து வியந்தாங்க. நம்ம படம் உலகதரத்துல நிக்குதுனு பெருமையாகவும் இருக்கு!