BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Saturday, 30 November 2024

Parenting: தாலாட்டுக் கேட்பது குழந்தைகளுக்கு இவ்வளவு நல்லதா?

'தால்' என்றால் 'நாக்கு', நாக்கை ஆட்டிப் பாடும் பாட்டு தாலாட்டு. 'தாலேலோ', 'ஆராரோ ஆரிரரோ', 'லுலுலாயி'... என்று வட்டாரத்துக்குத் தகுந்தபடி வார்த்தைகள்தான் மாறுமே ஒழிய அம்மாவின் தாலாட்டு கேட்காத தூளிப் பருவம் நம் பாரம்பரியத்துக்கு பழக்கமில்லை. இந்தத் தாலாட்டினால் குழந்தைகளுக்கு தூக்கத்தைத் தாண்டி வேறு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன? குழந்தைகள் நல மருத்துவர் பழனிராஜ் மற்றும் குழந்தைகள் மனநல மருத்துவர் ஜெயந்தினியிடம் கேட்டோம்.

Child (Representational Image)

குழந்தைகளின் உயிரைக் காக்கும்!

இந்த உலகில் 4000 வருடங்களாகத் தாலாட்டு ஒலித்துக்கொண்டு இருக்கிறது. தாலாட்டுப் பாடல்கள் என்பது ஏதோ குழந்தைகளை தூங்க வைக்கிற ஒரு மென்மையான சத்தம் மட்டுமே என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். அதற்குக் குழந்தைகளின் உயிரையே காப்பாற்றுகிற சக்தி இருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

லண்டனில் கிரேட் அர்மான் ஸ்ட்ரீட் ( Great Ormond Street ) என்கிற குழந்தைகள் மருத்துவமனையில் 2010-ல் தாலாட்டுக் குறித்த ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. குறைப் பிரசவத்தில் பிறந்து, அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த குழந்தைகளின் மத்தியில் அந்தக் குழந்தைகளின் அம்மாக்களைத் தொடர்ந்து தாலாட்டுப் பாட வைத்திருக்கிறார்கள். சில நாள்கள் கழித்து, தாலாட்டு கேட்ட குழந்தைகளுடைய பிராண வாயு எடுக்கும் அளவு அதிகரிக்கிறது. மூச்சுவிடக் கஷ்டப்பட்ட குழந்தைகள்கூட சற்று சிரமம் குறைந்து இருந்ததாக அந்த ஆய்வு சொல்கிறது. இதே ஆய்வை 2013 - ல் மறுபடியும் அந்த மருத்துவமனையில் செய்து பார்த்திருக்கிறார்கள். இந்த முறையும் குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தைகளின் மத்தியில் அவர்களுடைய அம்மாக்களைத் தாலாட்டு பாட வைத்திருக்கிறார்கள். இந்த முறையும் மூச்சுவிடக் சிரமப்பட்ட குழந்தைகள் நன்றாக மூச்சுவிட ஆரம்பித்திருக்கிறார்கள். மற்ற நாள்களைவிடத் தாலாட்டு கேட்ட நாள்களில் தாய்ப்பால் அதிகமாகக் குடித்திருக்கிறார்கள். தவிர, உடல் நலம் சரியில்லாமல் இருந்த சில குழந்தைகள் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குச் செல்கிற அளவுக்கு உடல் நலம் தேறியிருக்கிறார்கள். கையில் ஊசி போடும்போது வருகிற வலி உணர்வுகூட, குழந்தைகளிடம் குறைந்து இருந்ததாக அந்த ஆய்வு தெரிவித்திருக்கிறது. தவிர, தாலாட்டுப் பாடின அம்மாக்களும் மனச்சோர்வு குறைந்து காணப்பட்டதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இதன் ஆய்வின் மூலம், அம்மாக்களின் இதமான தாலாட்டு குழந்தைகளின் உயிரையும் காப்பாற்றும் என்பது தெளிவாகிறது.

Representational Image

அம்மாவின் மனச்சோர்வை நீக்கும்!

வயிற்றில் சிசுவுடன் ஒரு தாய் நடக்கும்போது உண்டாகிற அதிர்வு, கருவில் இருக்கிற குட்டி வாண்டுகளுக்கு எக்கச்சக்க சந்தோஷத்தைத் தரும். அதே சந்தோஷத்தை அம்மாவின் தாலாட்டை கேட்கிற ஒவ்வொரு தடவையும் அந்தக் குழந்தை அனுபவிக்கும். அதனால், யாரோ பாடிய பாடலை யூ டியூபில் போட்டுக் குழந்தைகளை தூங்க வைப்பதைவிட உங்கள் குழந்தைக்கு நீங்களே தாலாட்டு பாடுங்கள். குழந்தைகளின் ஆரோக்கியம் அதிகரிப்பதுடன் நீங்களும் மனச்சோர்வு நீங்கி வாழலாம்.

பாதுகாப்பு உணர்வைக் கொடுக்கும்

அம்மாவுடைய தாலாட்டை கேட்டுக்கொண்டே தூங்குகிற ஒரு குழந்தைக்கு கிடைக்கிற முதல் நன்மை 'நான் தனியா இல்லை' என்கிற பாதுகாப்பு உணர்வுதான். அடுத்து, குழந்தைகளுக்குப் பேச்சைவிட பாட்டு ரொம்ப பிடிக்கும். அதுவும் அதிக சத்தமில்லாமல், மென்மையான அம்மாவின் குரலில் பாடப்படுகிற தாலாட்டுக்கு குழந்தைகள் ரசிகர்கள். அதனால்தான், தாலாட்டு அழுகிற குழந்தைகளை சமாதானப்படுத்துகிறது; அவர்களின் பிடிவாதத்தைக் குறைக்கிறது; சந்தோஷப்படுத்துகிறது; தூங்கவும் வைக்கிறது.

குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் பழனிராஜ்

பேச ஆரம்பிக்கும்

இன்றைக்கு 50-ல் ஒரு குழந்தை தாமதமாகப் பேசுகிறது. அந்தக் காலத்தில் தாமதமாகப் பேசுகிற குழந்தைகளின் எண்ணிக்கை ரொம்ப ரொம்பக் குறைச்சல். அதற்குக் காரணம், பிறந்தது முதல் அம்மா, பாட்டி, அத்தை, சித்தி என்று பலருடைய தாலாட்டையும் கேட்டு வளர்ந்ததுதான். தாலாட்டுதான் குழந்தைகள் கேட்கிற முதல் மொழி. அந்த மொழியை நிறையக் கேட்டு வளர்ந்த குழந்தைகள் சரியான வயதில் பேச ஆரம்பித்து விடுவார்கள்.

பாதுகாப்பு உணர்வு கிடைக்கும்

தாய்மொழியைக் குழந்தைகளிடம் கொண்டு போய் சேர்க்கிற முதல் கருவி தாலாட்டுதான். இன்றைய அம்மாக்கள் இங்கிலீஷ் ரைம்ஸ் போட்டுக் குழந்தைகளை தூங்க விடுகிறார்கள். அதில் ஒலிப்பது குழந்தைகளுடைய அம்மாக்களின் குரல் கிடையாது என்பதால் குழந்தைகளுக்கு பாதுகாப்பு உணர்வு கிடைக்காது. அடுத்து அம்மா பேசுவது ஒரு தாய்மொழி, ரைம்ஸில் ஒலிப்பது வேறு மொழி. உங்கள் குழந்தை தாய்மொழியை சரளமாக பேச வேண்டுமென்றால், நீங்கள் கட்டாயம் தாலாட்டு பாட வேண்டும்.

ஜெயந்தினி குழந்தைகள் மனநல மருத்துவர்

பாசிட்டிவ் எண்ணம் ஏற்படும்

சில தாலாட்டு பாடல்கள் குழந்தைக்கும் உறவினர்களுக்கும் இடையே ஒட்டுதலை, பாசத்தை ஏற்படுத்தும் வண்ணம் இருக்கும். உதாரணத்துக்கு, 'யாரடிச்சு நீ அழுத' என்கிற தாலாட்டில் ஒவ்வொரு உறவுகளின் பெயரையும் குறிப்பிட்டு மாமன் அடிச்சாரோ மல்லிகைப்பூ செண்டாலே, தாத்தா அடிச்சாரோ தாமரைப்பூ தண்டாலே, பாட்டி அடித்தாலோ பாலூட்டும் கையாலே என்ற வரிகளில் 'உறவுகளின் மீதான பாசிட்டிவ் எண்ணம் குழந்தைகளின் பிஞ்சு மனதில் விதைக்கப்படுகிறது. அதாவது, உறவினர்கள் கோபத்தைக்கூட தன்னிடம் வலிக்காமல்தான் காட்டுவார்கள் என்ற நம்பிக்கையை குழந்தைகளிடம் ஏற்படுத்துகின்றன.

வன்முறை குறைவாக இருக்கும்!

தாலாட்டு குழந்தைகளின் மனதுக்குள் மட்டுமல்ல, மூளைக்குள்ளும் இதமான சூழ்நிலையை ஏற்படுத்தும் என்கின்றன ஆராய்ச்சிகள். மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது தாலாட்டு கேட்டு வளருகிற குழந்தைகளின் மனதில் வன்முறை எண்ணம் குறைவாக இருக்கும்.

இனிமேல் இரவுகளில் உங்கள் வீட்டிலும் தாலாட்டு ஒலிக்கட்டும்!

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/VaigainathiNaagarigam



URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies