BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Saturday, 9 November 2024

1039-வது சதய விழா: `கணவற்கு நிலச்சுமை குறைந்தது என மகிழ்ந்த ஆதிசேடன் மனைவியர்" ராஜராஜனின் பெருமைகள்

பொதுவாக அரசர்களது பிறந்தநாள் விழாவினைப் 'பெருமங்கலம்' என்றும் ; 'புண்ணிய நன்னாள்' என்றும் போற்றுவது தொன்று தொட்ட தமிழ் மரபு. இதுபோன்ற நாள்களில் அரசர்கள் கொலை தவிர்த்து, சிறை விடுத்து, வெள்ளணி அணிந்து, அருட் தன்மையுடன் விளங்கிடுவார்கள். எனவே இதனை 'வெள்ளணி நாள்' என்றும் போற்றுவது வழக்கம் என்று வரலாற்றுக் குறிப்புகள் பேசுகின்றன. 
சோழ மன்னன் ராஜராஜ சோழன்

மாமன்னர் ராஜராஜசோழன் பிறந்தபோது "இனி, தம் கணவற்கு நிலச்சுமை குறைந்தது எனும் மனமகிழ்ச்சியால் ஆதிசேடன் மனைவியர் களிப்புற்றனர்"  என்பது ஆலங்காட்டு செப்பேட்டுச் செய்தி. இவ்வாறு நீண்முடி வேந்தருக்குரிய அங்க அடையாளங்களுடன் உதித்தவன் ராசகேசரிவர்மன் என்கிற ராஜராஜன் என்று வரலாற்று நூலார் சிறப்பிக்கின்றனர்.

இத்தகு மங்கலத் திருநாளான ஐப்பசி - சதய விண்மீன் தினத்தில் உதித்த ஒப்புயர்வற்ற ராசராச சோழ மாமன்னரைப் போற்றிடும் விதமாக சில அரிய  கொடைகளை நினைவு கூறலாமா?

ராஜராஜ சோழன் ஆட்சியில் பெண்களுக்கு அனைத்துத் துறைகளிலும்  முன்னுரிமை அளித்த விதம்  போற்றப்படுகிற ஒன்று. அரசியல் நிர்வாகம் முதல் ஆன்மிகப் பணிகள்வரை பெண்களின் ஆளுமை அவர்தம் ஆட்சியில் நிலவியிருந்தது. 

மாமன்னர் ராசராசருக்குப் பட்டத்தரசியாராக விளங்கியவர் ஒலோகமாதேவியார் எனும் தந்தி சத்தி விடங்கியார். மன்னருக்கு மனைவியர் பலர். அரசியல் காரணங்களுக்காக இத்தகு பலமணம் புரிதல் அந்நாளில் அரச குடிகளின் இயல்புதான்.  ஆயினும் நற்செயல்களை நிகழ்த்திடும்போது உடனிருந்து நிவந்தங்களையும்; கொடைகளையும்  அளித்தத் தமது அரசிகளின் பெயர்களையும் கல்வெட்டுகளில்  பொறித்துப் பெருமைபடுத்தியுள்ள  மாண்பு ராசராசருடையது. 

கல்வெட்டுகளில்  அரசருடைய மனைவியராகிய இன்னார்  எனத் தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக "உடையார் ஸ்ரீ ராசராசதேவர் நம்பிராட்டியார்" எனும் அடைமொழி சேர்க்கப்பட்டுள்ளது அவரது தொலைநோக்குப் பார்வைக்கு சிறப்பானதொரு சான்று.

தஞ்சை பெரிய கோயில்

'ஹிரண்ய கர்ப்பமும்; திலபர்வதமும்'

விசேஷ நாள்களில் தானங்கள் அளிப்பதினால் பல மடங்கு அதீத புண்ணிய பலன்கள் கிடைப்பதாக சாஸ்திர நூல்கள் பேசுகின்றன. 

உயர்ந்த  நற்பலன்களைப் பெற்றிடுவதற்காக அக்காலத்தில் சோழமன்னர்குடிகள் இத்தகு தானங்களையும்; துலாபாரநேர்த்திகளையும் செய்துள்ள நிகழ்வுகளைக் கல்வெட்டுகள் மூலம் அறிகின்றோம். 

தானங்களிலே மிக உயர்ந்ததாக  'ஹிரண்ய கர்ப்ப தானம்' (இரணிய கருப்ப தானம்) என்பது அக்காலத்தில் கடைப்பிடிக்கப் பட்டிருக்கின்றது.  தங்கத்தினால் ஆன பெரியதோர்  பசுவுருவினைச் செய்துவைத்து அதன் முன் வேதம் வல்லவர்களைக் கொண்டு உயர்வேள்விகள் நடத்தி பூஜிப்பர்.  பிறகு யாகத்தினை நடத்தச் செய்கிறவரும் அவருடைய‌ மனைவியுடன் அப்பசுவின் வாய் வழியே உட்புகுந்து வயிற்றுப் பகுதியில் குறிப்பிட்ட நேரம்வரை தங்கியிருந்து  அதன்பின்பகுதி வழியாக வெளி வந்துவிடுவார்.  

இவ்வாறு பசுவின் உடலில் புகுந்து வருவது  அதன் கர்ப்பத்தில் தங்கியிருந்து மீண்டும் புதிதாக பிறந்து வருவதற்குச் சமம்.  

இந்நிகழ்வினை 'ஹிரண்ய கர்ப்ப பிரவேசம் '  (ஹிரண்யம் - பொன்) என்று வடமொழியில்  குறிப்பர். இவ்வாறு   'இரணியகருப்பம் புகுதல்' மூலம் முந்தைய தீவினைகள் அழிந்து தூய உடலோடு புதுப்பிறப்பு எடுப்பதாக ஐதிகம். பின்னர் அப்பொன் பசுவினைத் திருக்கோயில்களுக்கோ அல்லது  அந்தணர்களுக்கோ தானமாகப் பகிர்ந்து  அளித்து விடுவது வழக்கம். 

மாமன்னன் ராஜராஜ சோழர் தம்முடைய 29-ம் ஆட்சியாண்டில் கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருவியலூர்க் கோயிலில் (இன்றைய திருவிசநல்லூர்) தமது பட்டமஹிஷி ஒலோகமாதேவியுடன் ஹிரண்ய கர்ப்பம் புகுந்த செய்தியை அக்கோயில் கல்வெட்டு தெரிவிக்கின்றது. 

அதுபோல திலபர்வதம். (திலம் - எள்; பர்வதம் - மலை) எள்ளினை சிறு மலை போன்ற வடிவுடையதாகக் குவித்து வைத்து அதனுள் ஒருவர் பின் ஒருவராக தம்பதிகள் உள்நுழைந்து மறுபக்க வழியாக வெளியேறி விடுவர். பின்பு அந்த எள்மலையைப் பகிர்ந்து தானமாக அளித்து விடுவர். 

ராஜராஜ சோழர்

மாமன்னர்  ராஜராஜ சோழன் மறைவிற்குப்பின் அவரது மகனான ராஜேந்திர சோழன் இத்தகு திலபர்வத தானம் செய்து தமது தந்தைக்கு நீத்தார் கடன் ஆற்றிய  செய்தியும்  அறியத்தக்கது. 

"ஸ்ரீ கோவிராச கேசரி வன்மரான ஸ்ரீ ராசராசதேவர்க்கு யாண்டு இருபத்தொன்பதாவது ராசேந்திர சிங்கவளநாட்டு மண்ணிநாட்டுபிரம்மதேயம் வேம்பற்றூராகிய சோழ மார்த்தாண்ட சதுர்வேதி மங்கலத்து மகா சபையோம் கையெழுத்து, நம்மையுடைய சக்கிரவர்த்தி உடையார் ஸ்ரீ ராசராசதேவர் இவ்வூர் திருவிசநல்லூர் மகாதேவர் ஸ்ரீகோயிலிலே துலாபாரம் புக்கருளின அன்று நம்பிராட்டியார் தந்தி சத்தி விடங்கியார் இரணிய கருப்பம் புக்கருளி, இத். திருவிசநல்லூர் மகாதேவர்க்கு அக்காரவடிசில் அமுதுக்கு வேண்டும் நிபந்தங்களுக்காக வைச்ச காசு..." என்பது கல்வெட்டு செய்தி. 

பெருவிழா நாள்களிலும், வழிபாடு நிமித்தமும் ஸ்ரீராஜராஜ தேவர்  அளித்த இவ்விதமான  ஒப்புயர்வற்ற தானங்கள் மற்றும் அவை தொடர்பான சுவையான வரலாற்றுத் தகவல்களை அறிந்து போற்றுதல் செய்திடுவோம்!



URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies