2022 ஆம் ஆண்டிற்கான 70வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதில் 'பொன்னியின் செல்வன்' படத்திற்கு சிறந்த தமிழ்ப் படம், சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலிப்பதிவு என நான்கு பிரிவுகளில் விருதும் 'திருச்சிற்றம்பலம்' படத்திற்கு சிறந்த நடிகை, சிறந்த நடனம் என இரண்டு விருதுகளும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ் சினிமாவிலிருந்து கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பிறகு சிறந்த நடனத்திற்கான தேசிய விருதைப் பெற்றிருக்கிறது.
70 வருடங்களாக தேசிய விருது கொடுக்கப்பட்டு வந்தாலும் சிறந்த நடனத்திற்கான விருது 1991 ஆம் ஆண்டில் இருந்து தான் கொடுக்கப்படுகிறது. இந்த 31 வருடங்களில் இதுவரைக்கும் ஐந்து முறை தான் தமிழ் சினிமாவிற்கு இந்த விருது கிடைத்திருக்கிறது. எந்தெந்த தமிழ் படத்திற்காக இந்த விருது கொடுக்கப்பட்டது; அதை வாங்கியவர்கள் யார் யார் என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
சுந்தரம்:
1993 ஆம் ஆண்டு 41வது தேசிய விருதில் சிறந்த நடனத்திற்கான விருதை சுந்தரம் மாஸ்டர் 'திருடா திருடா' படத்திற்காகப் பெற்றார். மணிரத்னம் இயக்கத்தில் பிரசாந்த், ஆனந்த், ஹீரா ஆகியோர் நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த படம் 'திருடா திருடா'. இந்தப் படத்தில் வரும் பாடல்களில் 'சந்திரலேகா', 'வீரபாண்டி கோட்டையிலே' போன்ற பாடல்கள் மிகவும் பிரமாண்டமாக படமாக்கப்பட்டிருக்கும். ஒரு பாடலுக்கு என்று இல்லாமல் ஒட்டுமொத்தமாக இந்தப் படத்திற்காகவே சிறந்த நடனத்திற்கான விருதை சுந்தரம் மாஸ்டர் பெற்றார். சிறந்த நடனத்திற்காக விருது வாங்கிய முதல் தமிழ் படம் இதுதான்.
பிரபுதேவா:
சிறந்த நடனத்திற்கான விருதை தமிழ் சினிமாவில் இருந்து முதல் நபராக சுந்தரம் மாஸ்டர் பெற்றதும் இரண்டாவது ஆளாக அவரது மகன் பிரபுதேவாவே அந்த விருதை வாங்கினார். 1996 ஆம் ஆண்டு 44வது தேசிய விருதில் 'மின்சார கனவு' படத்தில் வரும் 'ஸ்ட்ராபெர்ரி கண்ணே', 'வெண்ணிலவே வெண்ணிலவே' என இரண்டு பாடலுக்காக பிரபுதேவா தேசிய விருது வாங்கினார். ராஜிவ் மேனன் இயக்கத்தில் அரவிந்த்சாமி, பிரபுதேவா, கஜோல் ஆகியோர் நடித்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த படம் 'மின்சார கனவு'. இதில், தான் நடித்த இரண்டு பாடல்களுக்கும் பிரபுதேவாவே நடனம் அமைத்திருப்பார். 'ஸ்ட்ராபெர்ரி கண்ணே' பாடல் பிரமாண்டம் என்றால் 'வெண்ணிலவே வெண்ணிலவே' பாடல் கிளாசிக். ஒரே படத்தில் இரண்டு வெவ்வேறான ஜானர்களில் நடனம் அமைத்து இந்த விருதை பிரபுதேவா வாங்கினார்.
சரோஜ் கான்:
2005 ஆம் ஆண்டு 53வது தேசிய விருதில் 'சிருங்காரம்' என்னும் தமிழ் படத்திற்காக சரோஜ் கான் என்ற பாலிவுட் நடன இயக்குநர் இவ்விருதை வாங்கி இருக்கிறார். சாரதா ராமநாதன் இயக்கத்தில் அதிதி ராவ், மனோஜ் கே விஜயன் ஆகியோர் நடிக்க லால்குடி ஜெயராமன் இசையமைத்த படம் 'சிருங்காரம்'. 53 வது தேசிய விருதில் சிறந்த இசை, சிறந்த நடனம், சிறந்த ஒளிப்பதிவு என மூன்று விருதுகளை வென்றது 'சிருங்காரம்' திரைப்படம். பரதநாட்டிய கலையை மையப்படுத்திய இந்தத் திரைப்படத்தில் அனைத்து பாடல்களையும் சரோஜ்கானே நடனம் அமைத்திருப்பார். முஜ்ரா எனப்படும் நடனத்தில் புகழ்பெற்ற சரோஜ்கான் மாஸ்டர் தான், பாலிவுட்டின் முதல் பெண் நடன இயக்குநர். சிறந்த நடனத்திற்கான தேசிய விருதினை மூன்று முறை வாங்கிய ஒரே நடன இயக்குநரும் இவர்தான்.
தினேஷ்:
2010 ஆம் ஆண்டு 58 வது தேசிய விருதில் 'ஆடுகளம்' திரைப்படத்தின் 'ஒத்த சொல்லால' எனும் பாடலுக்காக இவ்விருதை வாங்கினார் தினேஷ். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்த படம் 'ஆடுகளம்'. இந்தப் படத்தில் இடம்பெற்ற 'ஒத்த சொல்லால' எனும் பாடலுக்கு மிகவும் எதார்த்தமாகவும், எளிமையாகவும் நடனம் அமைத்திருப்பார் தினேஷ் மாஸ்டர். இதே 58வது தேசிய விருதில் சிறந்த இயக்கம், சிறந்த நடிகர், சிறந்த படத்தொகுப்பு, சிறந்த திரைக்கதை, சிறந்த நடனம், ஸ்பெஷல் ஜூரி விருது என மொத்தம் ஆறு விருதுகளை வென்றது 'ஆடுகளம்' திரைப்படம்.
பிர்ஜு மகாராஜ்:
2012 ஆம் ஆண்டு 60-வது தேசிய விருதில் 'விஸ்வரூபம்' திரைப்படத்தின் 'உன்னை காணாது நான்' எனும் பாடலுக்காக இந்த விருதை வாங்கினார் பிர்ஜு மகாராஜ். நடிகர் கமல்ஹாசன் இயக்கி, நடித்த 'விஸ்வரூபம்' படத்திற்கு இசையமைத்திருந்தார்கள், Shankar–Ehsaan–Loy கூட்டணியினர். 'விஸ்வரூபம்' படத்தின் 'உன்னை காணாது நான்' பாடலை கதக் எனும் நடனக் கலையை அடிப்படையாகக் கொண்டு நடனம் அமைத்திருப்பார், கதக் கலையின் வல்லுனரான பிர்ஜு மகாராஜ். கமல்ஹாசன் இந்தப் பாடலை எழுதியும் பாடகர் சங்கர் மகாதேவனோடு சேர்ந்து பாடியும் இருப்பார்.
ஜானி - சதீஷ் கிருஷ்ணன்:
'விஸ்வரூபம்' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு கிடைத்த சிறந்த நடனத்திற்கான விருது, 10 வருடங்களுக்குப் பிறகு இப்போது 'திருச்சிற்றம்பலம்' படத்திற்காக கிடைத்திருக்கிறது. மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன் நடித்து அனிருத் இசையமைத்திருந்த திரைப்படம் 'திருச்சிற்றம்பலம்'. இந்தப் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருதும் நித்யா மேனனுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. சிறந்த நடனத்திற்கான விருதை 'மேகம் கருக்காதா' பாடலுக்காக ஜானியும், 'தாய்க்கிழவி' பாடலுக்காக சதீஷ் கிருஷ்ணனும் வாங்குகிறார்கள். இந்த இரு பாடல்களும் வெவ்வேறான ஜானரில் படமாக்கப்பட்டிருக்கும். 'மேகம் கருக்காதா' பாடலின் நடனம் அதன் மெலடி தன்மையிலேயே அமைக்கப்பட்டிருக்கும். அதே போல் 'தாய்க்கிழவி' பாடலுக்கான நடனம் பயங்கர துள்ளலாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.