BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Thursday 30 March 2023

சிம்புவுக்கு ஹாட்ரிக் வெற்றியாக அமைந்ததா பத்து தல? - ஊடக விமர்சனம்

சிலம்பரசன், கௌதம் கார்த்திக், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிப்பில் ஒபிலி கிருஷ்ணா இயக்கியுள்ள பத்துதல திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

கன்னடத்தில் 2017ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற முஃப்தி திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் பத்து தல திரைப்படம். கன்னட நடிகர் சிவகுமார் நடித்த கதாபாத்திரத்தில் சிம்புவும் ஸ்ரீமுரளி நடித்த கதாபாத்திரத்தில் கௌதம் கார்த்தியும் நடித்துள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

கன்னியாகுமரியில் மணல் கொள்ளையில் ஈடுபடும் மிகப்பெரிய தாதாவான ஏஜிஆர் என்னும் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். மாநாடு படம் சிம்புக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததோடு அவரது திரையுலக பயணத்தில் திருப்புமுனை படமாகவும் அமைந்தது. அதை தொடர்ந்து சிம்பு நடித்திருந்த வெந்து தணிந்தது காடு திரைப்படமும் வசூல் ரீதியாக வெற்றிப் படமாகவே கருதப்படுகிறது. இந்த இரு வெற்றிப் படங்களையும் தொடர்ந்து வெளியாகியுள்ள பத்து தல திரைப்படம் எப்படி உள்ளது என்பது தொடர்பாக ஊடகங்களில் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் போலீஸ்- தாதா இடையேயான பகையை கூறும் படங்களுக்கு பஞ்சம் இல்லை. ஆனால், பார்வையாளர்களை கதாபாத்திரங்களின் உலகத்திற்கு நெருக்கமாக கொண்டு வரும் நிகழ்வுகள் மற்றும் சம்பவங்கள் மூலமே இத்தகைய திரைப்படங்கள் தனித்து நிற்க முடியும் என்று குறிப்பிட்டுள்ள டைம்ஸ் ஆஃப் இந்தியா, பத்து தல படத்தில் சில மறக்கமுடியாத நினைவுகள் இருந்தாலும், பார்வையாளர்களை கட்டாயப்படுத்தி ஈர்க்கும் விதமாக படத்தின் காட்சிகள் இருப்பதாக கூறியுள்ளது.

காணாமல் போன தமிழ்நாடு முதலமைச்சரை கண்டுபிடிக்கும் அண்டர் கவர் போலீசாக குணா என்னும் கதாபாத்திரத்தில் கௌதம் கார்த்தி நடித்துள்ளார். முதலமைச்சர் கடத்தலுக்கும் தாதாவான சிம்புவுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று கௌதம் சந்தேகிக்கிறார். எனவே, அவரிடம் அடியாளாக சேர்ந்து உண்மையை கண்டுபிடிப்பதே படத்தின் கதை என்றும் படத்தின் இரண்டாம் பாதியில் வரும் சிம்பு தனது சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளதாகவும் ஏ.ஆர். ரகுமான் பின்னணி இசை சிறப்பாக இருப்பதாகவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தில் சில குறைகள் இருந்தாலும் சிம்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ள பக்காவான பொழுதுபோக்கு கேங்ஸ்டர் படமாக பத்து தல இருப்பதாகவும் டைம்ஸ் ஆப் இந்தியா கூறுகிறது.

"ஒவ்வொரு கேங்ஸ்டர் படத்திலும் ஹிரோவாக உள்ள தாதா கடந்த காலத்தில் நல்லவராக இருப்பார். அவர் ஏன் தாதாவாக மாறினார் என்ற ஃபிளாஷ்பேக் இருக்கும். பத்துதல படத்திலும் இது உள்ளது. ஆனாலும் கவரவில்லை" என்று இந்தியா டுடே விமர்சனம் கூறுகிறது.

'படத்தின் ஒருசில காட்சிகள் ரசிகர்களுக்கு உற்சாகம் தரும்விதத்தில் இருக்கிறது. குறிப்பாக சிம்புவின் அறிமுகக் காட்சி. இருப்பினும் ஒபிலி கிருஷ்ணாவின் திரைக்கதை பெரும் பின்னடைவை ஏற்படுத்துகிறது. முக்கியமான காட்சிகள் கூட தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பிரதான வில்லனான கௌதம் மேனனின் பாத்திரம் வலுவானதாக இல்லை` என்று இந்தியா டுடே விமர்சனம் குறிப்பிட்டுள்ளது.

"தாதா ஏஜிஆராக சிம்பு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கௌதம் கார்த்தி அவரது திரைப்பயணத்தில் சிறப்பான கதாப்பாத்திரங்களில் ஒன்றை ஏற்று நடித்துள்ளார். ஏ.ஆர். ரகுமானின் பின்னணி இசை, யூகிக்கக்கூடிய கதையம்சம் கொண்டுள்ள இந்த படத்தை வேறு தளத்துக்கு எடுத்து செல்கிறது" என்றும் இந்தியா டுடே விமர்சனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிம்பு இடைவேளைக்கு பின்னர் மட்டுமே வருவது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தருகிறது என்று தினமலர் விமர்சனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "பத்து தல என டைட்டில் ரோலில் நடித்துள்ள சிம்புவை படம் முழுவதும் வர வைத்து தெறிக்கவிட்டிருக்க வேண்டும். இடைவேளைக்குப் பின் மட்டுமே அவருடைய ராஜ்ஜியம் தொடர்கிறது. அண்டர்கவர் போலீஸாக வரும் கௌதம் கார்த்திக் தனக்கு கொடுப்பட்ட வேலையை சரியாகச் செய்திருக்கிறார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ரோகிணி திரையரங்கில் அனுமதி மறுப்பு
இதற்கிடையே, பத்துதல திரைப்படத்தை பார்ப்பதற்கான சென்னை ரோகிணி திரையரங்கிற்கு சென்ற நரிக்குறவர் இன மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக வெளியான வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவிவருகிறது.

ரோகிணி திரையரங்கிற்கு, ’பத்து தல’ படத்தை காண்பதற்காக நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த மக்கள் சிலர், தங்களுடைய குழந்தைகளுடன் சென்றிருக்கின்றனர். ஆனால் அவர்களை உள்ளே அனுப்புவதற்கு ரோகிணி திரையரங்கின் டிக்கெட் பரிசோதகர் அனுமதி மறுத்துள்ளார். இந்த நிகழ்வை காணொளியாக எடுத்த இளைஞர் ஒருவர், அதனை சமூக ஊடகங்களில் பதிவு செய்தார்.

அந்த காணொளியில், தங்களை உள்ளே விடுமாறு நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பெண் முறையிடுகிறார். ஆனால் அங்கே நிற்கும் டிக்கெட் பரிசோதகர் அனுமதி மறுக்கிறார். இந்த காணொளி சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கிய நிலையில், சம்பந்தப்பட்ட நபர்கள் திரையரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டதாக ரோகிணி திரையரங்கம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

திரையரங்கம் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், எங்கள் திரையரங்க வளாகத்தில் நிகழ்ந்த சம்பவம் குறித்து நாங்கள் கவனத்தில் எடுத்திருகிறோம். சிலர் தங்களது குழந்தைகளுடன் 'பத்து தல' படத்தை காண்பதற்காக வந்திருக்கின்றனர். இந்த திரைப்படம் U/A சான்றிதழை பெற்றிருக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். எனவே 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இப்படத்தை காண்பதற்கு விதிமுறைகள் இருக்கின்றன. அதனால்தான் 2,6, 8, 10 ஆகிய வயதுகளைச் சேர்ந்த குழந்தைகளுடன் வந்திருந்த அவர்களுக்கு, எங்களது டிக்கெட் பரிசோதகர் அனுமதி மறுத்துள்ளார்.

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies