BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Monday 10 November 2014

பேச்சுவார்த்தை தோல்வி : வங்கி ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்


ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய வங்கிகள் நிர்வாகத்துடன் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தை தோலிவியடைந்ததைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி புதன்கிழமை (நவம்பர் 12) வேலைநிறுத்தத்தில் ஈடுபட அகில இந்திய வங்கி ஊழியர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன. பொதுத் துறை வங்கி ஊழியர்களுக்கு 25 சதவீத ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வங்கி ஊழியர்கள் சங்கங்கள் வலியுறுத்தி வந்தன. ஆனால், அவற்றை ஏற்றுக் கொள்ள வங்கி நிர்வாகங்கள் மறுப்புத் தெரிவித்து வந்தன. இதனால், கோரிக்கைகளை ஏற்க மறுத்தால் நாடு முழுவதும் புதன்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக பொதுத் துறை வங்கிகளின் ஊழியர் சங்கங்கள் அறிவித்தன. இதைத் தொடர்ந்து, வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோருக்கான 10 சங்கங்களின் உறுப்பினர்களை ஒருங்கிணைக்கும் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் தில்லியில் உள்ள மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அலுவலகத்தில் (ஷ்ரம் சக்தி பவன்) மத்திய தலைமைத் தொழிலாளர் ஆணையர் பி.பி. மிஸ்ரா புதன்கிழமை (நவம்பர் 5) முதல் கட்டப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, 11 சதவீதத்துக்கு மேல் ஊதிய உயர்வு அளிக்க முடியாது என்று இந்திய வங்கிகள் நிர்வாகம் பிடிவாதமாக இருந்தன. இதைத் தொடர்ந்து, இரண்டாவது கட்டப் பேச்சுவார்த்தை திங்கள்கிழமை நடைபெற்றது.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அகில இந்திய வங்கி ஊழியர்களின் சங்கப் பொதுச் செயலாளர் சி.எச். வெங்கடாசலம் கூறுகையில், இந்திய வங்கிகள் நிர்வாகத்துடன் இரண்டாவது கட்டமாக திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, 25 சதவீத ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். அதைக் குறைத்துக் கொள்ளும்படி இந்திய வங்கிகள் நிர்வாகம் கேட்டுக் கொண்டது.  இதையடுத்து, 23 சதவீதமாகக் குறைத்துக் கொள்வதாக தெரிவித்தோம். ஆனால், 11 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்க முடியாது என இந்திய வங்கிகள் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்தவித சுமூகத் தீர்வும் எட்டப்படவில்லை. எனவே, ஏற்கெனவே அறிவித்தப்படி நவம்பர் 12-ஆம் தேதி அகில இந்திய அளவில் வேலைநிறுத்தம் நடைபெறும் என்றார்.பிராந்திய வேலைநிறுத்தம்: தேசிய வங்கி ஊழியர்கள் சங்கம் (என்யுபிஇ) பொதுச் செயலாளர் எல். பாலசுப்ரமணியன் கூறுகையில், வங்கி ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் டிசம்பர் 2, 3, 4, 5 ஆகிய தேதிகளில் பிராந்திய வாரியாக வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படும். இந்த வேலைநிறுத்தம் தமிழகத்தில் 2-ஆம் தேதி மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

இந்தப் பேச்சுவார்த்தையில் இந்திய வங்கிகள் சங்க (ஐபிஏ) பிரதிநிதிகள் மற்றும் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு (ஏஐபிஓசி) பொதுச் செயலாளர் அர்விந்தர் சிங், ஒன்பது சங்கங்களை உறுப்பினர்களாகக் கொண்ட வங்கி சங்கங்களின் ஐக்கிய அமைப்பின் (யுஎஃப்பியு) தலைவர் கே.கே. நாயர், அமைப்பாளர் என்.வி. முரளி, அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்க (ஏஐபிஓஏ) பொதுச் செயலாளர் எஸ். நாகராஜன் மற்றும் வங்கி ஊழியர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies