BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Monday 10 November 2014

உருகும் பனி! ஒரு தீவுக்காக சீனா - ஜப்பான் இடையே 40 ஆண்டுகள் மறைமுக யுத்தம்



உலகின் 2ஆவது பெரிய பொருளாதார சக்தியான சீனாவும், 3ஆவது பெரிய சக்தியான ஜப்பானும் மனிதர்கள் வசிக்காத ஒரு குட்டித் தீவுக்காக நடத்தும் பனிப்போர்தான் சர்வதேச அளவில் இப்போது பெரிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. கிழக்கு சீனக்கடலில் உள்ள அந்தத் தீவுக் கூட்டம் "செங்காக்கு' என ஜப்பான் மொழியிலும், "டையாயூ' எனச் சீன மொழியிலும் அழைக்கப்படுகிறது. இரு நாடுகளுக்கும் புவியியல் ரீதியாக முக்கியமான தீவு இது. 1894-95இல் நடந்த முதல் சீன-ஜப்பானியப் போரில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, அத்தீவை ஜப்பான் தனது நாட்டுடன் இணைத்துக் கொண்டது. இருப்பினும், 1945இல் இரண்டாம் உலகப் போரின் முடிவில் அமெரிக்காவிடம் ஜப்பான் சரணடைந்ததையடுத்து, இத்தீவு அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குச் சென்றது. 1972இல் இத்தீவை மீண்டும் ஜப்பானிடமே அமெரிக்கா ஒப்படைத்தது முதல் இத்தீவு ஜப்பானின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஆனால், அதே ஆண்டுமுதல் சீனாவும் இதற்கு உரிமைகோர ஆரம்பித்தது. 2012ஆம் ஆண்டு செங்காக்கு தீவுக்கூட்டத்தில் அடங்கிய 3 குட்டித்தீவுகளை ஜப்பானைச் சேர்ந்த தனியாரிடமிருந்து விலைக்கு வாங்கிவிட்டதாக ஜப்பான் அறிவித்ததில் இருந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு சீர்கெட்டு, ஆயுத மோதல் ஏற்படும் அபாயத்தை உருவாக்கிவிட்டது. இரு நாடுகளும் தங்கள் கப்பல்களையும், விமானங்களையும் இத்தீவுப் பகுதிக்கு அனுப்பி கண்காணித்ததைத் தொடர்ந்து பதற்றம் அதிகரித்தது.

"நாட்டின் இறையாண்மை போன்ற உணர்வுபூர்வமான விஷயங்களை ஜப்பான் கவனத்துடன் கையாள வேண்டும்' என சீனா கூறி வந்தாலும், அத்தீவு ஒரு பிரச்னைக்குரியது என்பதையே ஜப்பான் ஏற்றுக்கொள்ள மறுத்தது. இந்தச் சூழ்நிலையில்தான் சீனாவின் தூதரக அதிகாரி யாங் ஜெய்ச்சியும், ஜப்பான் பிரதமர் ஷின்úஸா அபேயின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சொடாரோ யாச்சியும் கடந்த நவம்பர் 7ஆம் தேதி பெய்ஜிங்கில் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட ஒப்பந்தம் இத்தீவுப் பிரச்னைக்கு ஒரு முக்கியமான திருப்பத்தைக் கொடுத்துள்ளது. அந்தப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "இப்பிரச்னையில் இரு நாடுகளும் இரு வேறு நிலையில் இருக்கின்றன' என இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாக அறிவித்தன. இதுவரை தீவு விவகாரத்தை ஒரு பிரச்னையாகவே கருதாத அல்லது அப்படிச் சொல்ல மனம் வராத ஜப்பான், முதல் முறையாக அதில் வேறுபட்ட நிலையில் இருப்பதாக ஒப்புக்கொண்டதையே பெரிய வெற்றியாகக் கருதுகிறது சீனா.

இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்றுவரும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும், ஜப்பான் பிரதமர் ஷின்úஸா அபேயும் திங்கள்கிழமை (நவம்பர் 10) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அரை மணி நேரம் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில், இரு நாடுகளுக்கு இடையிலான கடல் பகுதி மோதலைத் தடுக்க ஒரு மேலாண்மைத் திட்டத்தை உருவாக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. "இரு நாடுகளும் தங்களுக்கு இடையிலான உறவை மேம்படுத்துவதற்கான முதல் அடியை எடுத்து வைத்துள்ளதாக நான் நம்புகிறேன்' என இந்தச் சந்திப்புக்குப் பின்னர் தெரிவித்தார் ஜப்பான் பிரதமர் அபே.

"சீனா-ஜப்பான் இடையிலான அடர்த்தியான பனியை உடைக்க ஊக்கமளிக்கக் கூடிய ஐஸ் பிரேக்கராக' இருக்கும் என, இரு தலைவர்களின் சந்திப்புக்கு முன்னதாக, சீனாவின் அதிகாரப் பூர்வ செய்தி நிறுவனமான ஜின்ஹுவா தெரிவித்தது. இப்போது திட்டமிட்டபடி இரு தலைவர்களும் சந்தித்துப் பேசியுள்ளனர்; பனி உருகத் தொடங்கியிருக்கிறது.

எங்கே இருக்கிறது? என்ன இருக்கிறது?: 7 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட செங்காக்கு தீவுக்கூட்டம் உட்சுரி, கிடாகொஜிமா, மினாமி கொஜிமா, குபா, தாய்ஷோ ஆகிய 5 தீவுகளையும், மேலும் 3 சிறிய தீவுகளையும் உள்ளடக்கியது. சீனாவில் இருந்து 200 கடல்மைல் கிழக்கிலும், ஜப்பானின் ஒகினவா தீவில் இருந்து 200 கடல் மைல் தென் வடக்கிலும் அமைந்துள்ளது. இவற்றில் உட்சுரி, கிடாகொஜிமா, மினாமி கொஜிமா ஆகிய 3 தீவுகளை 1932இல் ஜப்பானை சேர்ந்த தனியாரின் உரிமைக்கு வழங்கிய ஜப்பான் அரசு, சீனா அதற்கு உரிமை கோரி நெருக்கடி கொடுக்கத் தொடங்கிய நிலையில், தனியாரிடமிருந்து அத்தீவுகளை விலைக்கு வாங்கிவிட்டதாக 2012இல் அறிவித்தது. எண்ணெய் வளமும், இயற்கை எரிவாயு வளமும் இத்தீவுப் பகுதியில் செழிப்பாக இருப்பதாக ஆசியா மற்றும் தூரகிழக்கு நாடுகளுக்கான ஐக்கிய நாடுகள் பொருளாதார கமிஷன் 1969இல் கண்டுபிடித்துச் சொன்னது.

நேருக்கு நேர் : ஜப்பான் பிரதமர் அபே 2012இல் பதவி ஏற்றதில் இருந்தே சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை சந்தித்துப் பேசியதில்லை. 2013, செப்டம்பரில் ரஷியாவில் நடைபெற்ற ஜி20 நாடுகள் மாநாட்டின்போது இருவரும் சந்தித்து கைகுலுக்கியதுடன் சரி. இப்போது ஆசிய-பசிபிக் பொருளாதார உச்சி மாநாட்டில் இரு தலைவர்களும் சந்தித்துப் பேசியுள்ளது இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் ஒரு முக்கியமான மைல்கல்லாக கருதப்படுகிறது.

பின்னணியில் அமெரிக்கா: செங்காக்கு தீவு விவகாரத்தில் ஜப்பானுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது அமெரிக்கா. செங்காக்கு தீவுக் கூட்டத்தின் ஒரு பகுதியான குபா தீவை அமெரிக்கா ராணுவப் பயிற்சிக்காகப் பயன்படுத்துவதற்கு ஜப்பான் சில காலம் "வாடகைக்கு' விட்டிருந்தது கூடுதல் தகவல்.

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies