ஐந்து மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை ரத்துசெய்யப்பட்டதற்கு திமுக தலைவர் கருணாநிதி வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 14-11-2014 அன்று தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு உடனடியாக இலங்கை அரசோடு தொடர்பு கொள்ள ண்டுமென்று நான் கடந்த 31-10-2014 அன்று விடுத்த அறிக்கையில் கேட்டுக் கொண்டிருந்தேன். தமிழகத்திலே உள்ள மற்ற அரசியல் கட்சிகளும், மீனவர் அமைப்புகளும், தமிழக அரசினரும் மத்திய அரசுக்குத் தொடர்ந்து இது பற்றி வேண்டுகோள் விடுத்து வந்தனர்.
தமிழகத்தின் வேண்டுகோளை ஏற்று, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மீனவர்களின் விடுதலை பற்றி பேசியதையடுத்து, துhக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தி இன்றைய தினம் (14-11-2014) கிடைத்துள்ளது. ஐந்து மீனவர்களின் விடுதலையையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரவேற்பதோடு, இந்த விடுதலைக்குப் பெரிதும் காரணமான இந்தியப் பிரதமர் மோடிக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.