இந்த ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் ஜீன் டிரோலுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தையின் ஆற்றல், அதனை முறைப்படுத்துவது குறித்த மிகச் சிறந்த ஆய்வுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. ஸ்வீடன் விஞ்ஞானியான ஆல்ஃபிரட் நோபலின் நினைவாக, பல்வேறு துறைகளில் சாதனை நிகழ்த்தியவர்களுக்கு ஆண்டு தோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது
.
மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதிப் பணி ஆகிய துறைகளில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டன. இறுதியாக, பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பிரெஞ்சு பொருளாதார நிபுணர் ஜீன் டிரோலுக்கு வழங்கப்படுவதாக திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. ஸ்விட்சர்லாந்தின் ஸ்டாக்ஹோம் நகரிலுள்ள "ராயல் ஸ்வீடிஷ் அகாடமி'யில் இந்த அறிவிப்பை வெளியிட்ட தேர்வுக் குழு தெரிவித்ததாவது: மிகச் சில நிறுவனங்களின் நடவடிக்கைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, தொழில்துறையை கட்டுப்படுத்துவதற்கான புரிந்துணர்வை அரசுகளுக்கு ஏற்படுத்தியமைக்காக ஜீன் டிரோலுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
நிறுவனங்களின் வீழ்ச்சி தொடர்பாக ஜீன் டிரோல் 1980-களின் மத்தியிலிருந்தே ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். பிற நிறுவனங்களைக் கையகப்படுத்துவது, உற்பத்தி, விநியோகம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவது ஆகியவற்றின் வாயிலாக நிறுவனங்கள் ஏகபோக உரிமையை நிலைநாட்டுவதை அரசுகள் எவ்வாறு கையாளவேண்டும் என்பதை அவரது ஆய்வுக் கட்டுரைகள் தெளிவாக விளக்குகின்றன. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முதல் வங்கிகள் வரையிலான பல்வேறு துறை நிறுவனங்கள் குறித்தும் தொழில் கொள்கை வகுக்க அவரது புத்தகங்கள் பேருதவி புரிகின்றன என்று தேர்வாளர்கள் குறிப்பிட்டனர். ஆல்ஃபிரட் நோபலால் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு உருவாக்கப்படவில்லை என்றாலும், அத்துறையை ஊக்கப்படுத்துவதற்காக ஸ்வீடன் மத்திய வங்கி 1968-ஆம் ஆண்டு இந்த விருதை உருவாக்கியது. ஜீன் டிரோல் உள்பட, இந்த ஆண்டு நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் ஆல்ஃபிரட் நினைவு தினமான டிசம்பர் 10-ஆம் தேதி நோபல் பரிசு வழங்கப்படும்.
ஜீன் டிரோல் (61)பிரான்ஸின் டிராயஸ் நகரில் 1953-ஆம் ஆண்டு பிறந்தவர் ஜீன் டிரோல். மாசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் 1981-ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்ற இவர், டூலூஸ் பொருளாதாரக் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். ஹங்கேரியில் வழங்கப்படும் கெளரவம் மிக்க "ஜான் வான் நியூமன்' விருதினை 1998-ஆம் ஆண்டு இவர் வென்றுள்ளார்.
SIMILAR ARTICLES
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"